அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காகப் பொது இடங்களில் அமுதூட்டும் அறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பூங்காக்கள், நூலகங்கள், போக்குவரத்து முனையங்கள், அலுவலக வளாகங்கள் என மொத்தம் பால் கொடுப்பதற்கான 60 புதிய சிற்றறைகள் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் நிறுவப்படும்.
நாட்டின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர், சமூக நிறுவனமான கோ!மாமா (Go!Mama), தெமாசெக் அறநிறுவனம், தேசிய தொண்டூழியர், கொடை நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) புதிய சிற்றறைகளை அறிமுகம் செய்தது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 300 சிற்றறைகளை நிறுவத் திட்டமிட்டுள்ள கோ!மாமா நிறுவனம் 60 புதிய சிற்றறைகள் மூலம் பாதி அளவிலான இலக்கைத் தாண்டிவிட்டது.
கோ!மாமா நிறுவனம் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 100 சிற்றறைகளை அமைத்துள்ளது. அவற்றை 20,000க்கும் அதிகமான தாய்மார்களும் பராமரிப்பாளர்களும் பயன்படுத்தியுள்ளனர்.
பால் கொடுக்கவும், புட்டிகளில் பால் எடுக்கவும் சராசரியாக அவர்கள் 20 நிமிடங்களை அவ்வறைகளில் செலவிட்டனர்.
கோ!மாமா நிறுவனம் சோதனை முயற்சியாக 2021ஆம் ஆண்டு ஐந்து அறைகளைச் செந்தோசாவில் அறிமுகம் செய்தது.
பால் கொடுப்பதற்கு வசதியான, சுத்தமான இடங்களை நிறுவுவதற்கு அண்மை மாதங்களில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
5,000 சதுர அடி அல்லது அதற்கு அதிகமான பரப்பளவு கொண்ட புதிய கட்டடங்களில் தாய்மார்கள் பால் கொடுக்க குறைந்தது ஓர் அறையையேனும் ஒதுக்கவேண்டும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் பிப்ரவரியில் மாற்றியமைத்தது.
இதற்கு 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடங்களுக்கு மட்டும் அந்த விதி பொருந்தும்.
அத்தகைய அறைகள் கழிவறைகளுக்குள் அமைக்கப்படக்கூடாது என்பதும் புதிய விதிமுறை.
புதிய கட்டடங்கள், பெரிய அளவிலான புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் கட்டடங்கள் ஆகியவற்றில் புதிய விதிகள் நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்.