தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெர்லாயார் பேட்டையில் அதிகமான பிடிஓ வீடுகள் கட்டப்படும்

2 mins read
a8ecc036-8537-4371-8626-c56464cab967
புதிய பெர்லாயார் பேட்டையில் சுமார் 7,000 வீவக அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்
multi-img1 of 2

பெர்லாயார் பேட்டை என்று அழைக்கப்படும் புதிய குடியிருப்புப் பகுதியில், முன்னைய கெப்பல் கிளப் இருந்த இடத்தில், சுமார் 7,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். இது கிரேட்டர் சதர்ன் நீர்முகப்பின் வளர்ச்சியைத் தொடங்கி வைக்கும்.

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விரிவான திட்டமிடல் ஆய்வுகளைத் தொடர்ந்து, முன்னர் அறிவிக்கப்பட்ட 6,000 வீடுகளிலிருந்து இப்போது வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 23ஆம் தேதி கழகம் தெரிவித்தது.

2014 முதல் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 48 ஹெக்டர் நிலப்பரப்பில் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படும்.

இந்தப் புதிய பேட்டையின் பெயரான ‘பெர்லாயார்’ என்றால் மலாய் மொழியில் படகோட்டம் என்று பொருள்படும். இந்தப் பகுதியின் அடையாளங்களையும் கடல்சார் பாரம்பரியத்தையும் அங்கீகரிக்கும் விதமாக இது இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹாங் டாட், செப்டம்பர் 23ஆம் தேதி ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழக விருது வழங்கும் விழாவின்போது தெரிவித்தார்.

“பெர்லாயார் வெறும் வீடமைப்புப் பேட்டையாக மட்டும் இருக்காது. இது இயற்கை, பாரம்பரியம், நவீன வாழ்க்கை முறை ஆகியவை ஒன்றிணைந்த ஒரு துடிப்பான கடற்கரை நகரமாக இருக்கும்,” என்று திரு சீ கூறினார்.

அந்தப் பேட்டையின் முதல் பிடிஓ குடியிருப்புத் திட்டமான ‘பெர்லாயார் ரெசிடென்சஸ்’, அக்டோபரில் தொடங்கப்படும். இதில் இரண்டு அறைகள் கொண்ட ஃபிளெக்ஸி, மூன்று மற்றும் நான்கு அறைகள் கொண்ட 870 வீடுகள் இருக்கும். புக்கிட் மேரா நகரத்தின் கீழ் வரும் இந்தத் திட்டத்தில் 200 பொது வாடகை வீடுகளும் இருக்கும்.

தெலுக் பிளாங்கா மற்றும் லெப்ரடோர் பார்க் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு, 19 முதல் 46 மாடிகள் உயரமுள்ள புளோக்குகளைக் கொண்டிருக்கும்.

‘ஸ்டாண்டர்ட்’, ‘பிளஸ்’ அல்லது ‘பிரைம்’ வீடுகளாக அதன் வகைகள் வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்படும் என்று கழகம் தெரிவித்தது.

பெர்லாயார் பேட்டையில் உள்ள பிடிஓ திட்டங்கள் வெவ்வேறு உயரங்களைக் கொண்ட புளோக்குகளைக் கொண்டிருக்கும் என்றும் மேலும் பல வீடுகள் கடற்கரை மற்றும் தெற்கு கடற்பகுதிக் காட்சிகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் திரு சீ கூறினார்.

இதில் மவுண்ட் ஃபேபர் பார்க், தெலுக் பிளாங்கா ஹில் பார்க், கென்ட் ரிட்ஜ் பார்க், லெப்ரடோர் இயற்கை வனப்பகுதி, செந்தோசா ஆகியவையும் அடங்கும்.

சுமார் 18 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான 10 ஹெக்டர் நிலம் பசுமைப் பகுதிகளுக்காக ஒதுக்கப்படும் என்று அமைச்சர் சீ விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்