தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியா, தென்கொரியாவைவிட சிங்கப்பூரில் புற்றுநோயாளிகள் மரணம் அதிகம்

2 mins read
பரிசோதனை ஒரு காரணமாக இருக்கலாம்
7c04d457-d898-418f-b057-0158637f715d
சிங்கப்பூரில் 100 புற்றுநோயாளிகளில் 51 பேர் மரணமடைகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியாவில் தென்கொரியா, ஜப்பான் நாடுகளைவிட சிங்கப்பூரில் புற்றுநோயாளிகள் மரணம் அதிகம்.

இதற்கு, புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும்போது நோயாளியின் வயது, பரிசோதனை மேற்கொள்வோரின் எண்ணிக்கை, சிகிச்சை கிடைக்கப்பெறுவது போன்ற பல காரணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதன் தொடர்பில் ஆசிய-பசிபிக் மருத்துவ தொழில்நுட்ப சங்கம் (Asia-Pacific Medical Technology Association) வெளியிட்ட ஆய்வு அறிக்கை, சிங்கப்பூரில் 100 புற்றுநோயாளிகளில் 51 பேர் மரணமடைகின்றனர் என்று தெரிவித்துள்ளது. ஒப்புநோக்க, ஆஸ்திரேலியாவில் 24, அமெரிக்காவில் 25, தென்கொரியாவில 38, ஜப்பானில் 41 என்று இருப்பதாக அந்த ஆய்வறிக்கை சுட்டியது.

‘என்ஜிஎஸ்’ (next-generation sequencing) எனப்படும் புற்றுநோய் உயிர்குறியீடுகளை அடையாளப்படுத்தும் பரிசோதனையால் மேம்பட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அத்துடன், இந்தப் பரிசோதனை முறையை குறைவாகப் பயன்படுத்தும் நாடுகளில்தான் புற்றுநோயால் மரணம் ஏற்படுவது அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தப் புதிய புற்றுநோய் பரிசோதனை முறை கிடைக்கப் பெறுவோர், கிடைக்கப் பெறாதோர் ஆகியோரிடையே இருக்கக்கூடிய வித்தியாசமான மரண எண்ணிக்கை ஒருபுறம், புதிய பரிசோதனை முறை மறுபுறம், இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்பொழுது ஆய்வுகள் இல்லை என்பதையும் ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்கிறது.

இருப்பினும், என்ஜிஎஸ் பரிசோதனை செல்வோர் செலுத்தும் கட்டணங்கள் திருப்பித்தரப்படும் தென்கொரியா போன்ற நாடுகளில் நுரையீரல், மலக்குடல் புற்றுநோய்க்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நோயாளிகள் நல்ல பலனடைவது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது பற்றிக் கருத்துரைக்கும் தேசிய புற்றுநோய் நிலையத்தின் இணைப் பேராசிரியர் ரவிந்திரன் கணேஸ்வரன், “என்ஜிஎஸ் சிகிச்சை முறையால் நோயாளிகளின் புற்றுநோய்க் கட்டிகள் குறித்த நமது புரிதல் மேம்பட்டுள்ளபோதிலும், அதைப் பரவலாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த புற்றுநோயாளிகளின் மரண விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று கூறுவது தவறானது,” என்று தெரிவிக்கிறார்.

மேலும் அவர், “வெவ்வேறு நாடுகளில் புற்றுநோயாளிகளுக்கு இடையே மரண எண்ணிக்கை விகிதத்தில் காணப்படும் வித்தியாசம், பொதுமக்களிடையே புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் போது அவர்களின் வயது, பரிசோதனைக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை, மரபணு அம்சம், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, சமுதாய-பொருளியல் நிலை, சிகிச்சை கிடைக்கப் பெறும் சாத்தியம், சுகாதார கட்டமைப்பு, ஆகியவற்றுடன் சார்ந்த மேலும் பல காரணங்கள் உள்ளன,” என்று தெளிவுபடுத்தினார்.

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரைவிட அதிகமானோர் புற்றுநோய் பரிசோதனைக்குச் செல்வதையும் திரு ரவிந்திரன் கணேஸ்வரன் சுட்டினார்.

இதுபற்றிய செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சு, தேசிய துல்லிய சிகிச்சை உத்தியின் ஓர் அங்கமாக, அமைச்சு துல்லிய மருத்துவ சிகிச்சையை நீடித்த நிலையில் வழங்கும் விதமாக தனது ஒட்டுமொத்த அணுமுறையையும் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்