அழகுப் பராமரிப்புத் துறையில் அதிகப் புகார்கள்: பயனீட்டாளர் சங்கம்

2025ல் $2.1 மில்லியனுக்குமேல் இழப்பு

அழகுப் பராமரிப்புத் துறையில் அதிகப் புகார்கள்: பயனீட்டாளர் சங்கம்

2 mins read
e4f61b7b-6fe1-4738-9460-2bd1ad2772f5
வான் யாங் நிலையம் மூடப்பட்டதால் பயனீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ஏறக்குறைய $1.25 மில்லியன்.  - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் அழகுப் பராமரிப்புத் துறையின் தொடர்பில் கடந்த ஆண்டு (2025) பயனீட்டாளர்கள் மொத்தம்  2,113 புகார்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 76.2 விழுக்காடு அதிகம். 2024ல் புகார்களின் எண்ணிக்கை 1,199.

அழகுப் பராமரிப்புச் சேவைக்கு முன்கூட்டியே பணம் கொடுத்தவர்கள் இழந்த தொகை $2.1 மில்லியனுக்கும் அதிகம். அதில் பெரும்பாலான இழப்பு, வான் யாங் சுகாதாரப் பொருள்கள், கால் பிடிப்பு நிலையம் போன ஆண்டு நவம்பர் மாதம் திடீரென்று மூடப்பட்டதால் ஏற்பட்டது.

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு அழகுப் பராமரிப்புத் துறைக்கு எதிரான 2,113 புகார்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு, கொடுக்கப்பட்ட முன்பணத்தைத் திரும்பப் பெறமுடியாததால் ஏற்பட்ட இழப்பு என்று சங்கம் சொன்னது. நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பின்னர் பெறப்போகும் சேவைகளுக்காகக் கொடுத்த முன்பணத்தை இழந்தனர்.

பல்வேறு துறைகளில் முன்பணம் கொடுத்ததால் ஏற்பட்ட இழப்பில், அழகுப் பராமரிப்புத் துறையின் பங்கு 78.6 விழுக்காடு. வான் யாங் நிலையம் மூடப்பட்டதால் பயனீட்டாளர்கள் ஏறக்குறைய $1.25 மில்லியனை இழந்தனர்.

அழகுப் பராமரிப்புத் துறையைத் தவிர்த்து, பயணத் துறை பற்றியும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டன. 2024ல் 420ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு 619க்குக் கூடியது.

அவற்றில் கிட்டத்தட்ட பாதி, பயணங்களை ரத்து செய்ததாலோ திட்டங்களில் மாற்றங்களைச் செய்ததாலோ பணத்தைத் திரும்பப் பெறுவதில் சர்ச்சை எழுந்ததாலோ உண்டானவை.

புகார்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை, இணையத்தில் வர்த்தகம் செய்த பயண முகவர்கள் தொடர்பானவை. 2024ல் 380ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை போன ஆண்டில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்து 567 ஆனது.

சிங்கப்பூருக்கு வந்துபோகும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே அதற்கு முக்கியக் காரணம் என்று சங்கம் சுட்டியது. கடந்த ஆண்டில் சிங்கப்பூருக்கு 69.98 மில்லியன் பேர் வந்துசென்றனர்.

மின்னியல், மின்னணு, மோட்டார்வாகனம், புதுப்பிப்புக் குத்தகை, தொலைத்தொடர்பு முதலிய துறைகளிலும் கூடுதல் புகார்கள் பெறப்பட்டன.

“அதிகரித்துள்ள புகார்கள், போதிய பாதுகாப்பின்றிப் பயனீட்டாளர்கள் முன்பணம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்தைக் காட்டுகின்றன,” என்றார் சங்கத் தலைவர் மெல்வின் யோங்.

“நம் பாதுகாப்புக் கட்டமைப்பு, பிரச்சினைகள் வந்த பின்பு என்றில்லாமல் அவை எழும் முன்பே உதவிக்கு வரவேண்டும். அதிக ஆபத்துள்ள துறைகளில் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குப் பயனீட்டாளர்ப் பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவுடன் சங்கம் அணுக்கமாகப் பணியாற்றும்,” என்றும் திரு மெல்வின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்