சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை அடைய முயற்சி எடுத்துவரும் வேளையில், கட்டட, கட்டுமானத் துறையில் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கரிமக் கணிப்பான், மாற்றி அமைக்கப்பட்ட கரிமச் சேவை சான்றிதழ்த் திட்டம் போன்றவை அவற்றில் அடங்கும்.
அனைத்துலகப் பசுமைக் கட்டடக் கருத்தரங்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
கட்டட, கட்டுமான ஆணையத்துடனும் சிங்கப்பூர் பசுமைக் கட்டட மன்றத்துடனும் இணைந்து ஜேடிசி குழு ஒன்று சிங்கப்பூர் கட்டடக் கரிமக் கணிப்பானை உருவாக்கியுள்ளது.
கட்டட, கட்டுமானத் துறையில் உள்ள பொறியாளர்களும் மேம்பாட்டாளர்களும் இப்போது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய சிங்கப்பூர்க் கட்டடக் கரிமக் கணிப்பானைப் பயன்படுத்தலாம்.
கட்டடங்கள், நகர அமைப்புகளைக் கட்டும்போது ஏற்படக்கூடிய கண்ணுக்குத் தெரியாத கரிம வெளியேற்றத்தைக் கணக்கிட அது கைகொடுக்கும்.
கட்டடப் பொருள்களை அகற்றுவது, அமைப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்வது போன்றவற்றாலும் கட்டுமானத்தாலும் கரிம வெளியேற்றம் ஏற்படுகிறது.
அத்தகைய கரிமம், உலகக் கரிம வெளியேற்றத்தில் 11 விழுக்காடு. கட்டடங்களைப் பொறுத்தவரை அது 30 விழுக்காடாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கரிம வெளியேற்றத்தைக் கணக்கிடும் நடவடிக்கை வழக்கமாகக் கட்டடத்தை வடிவமைக்கும்போது செய்யப்படுகிறது.
ஆனால், தற்போதைய கட்டடங்களில் பெரிய அளவிலான புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும் அந்தக் கணிப்பானைப் பயன்படுத்தலாம் என்று ஜேடிசி தலைமை அதிகாரி டான் சீ கியாட் கூறினார்.
முன்னதாக, கட்டட, கட்டுமானத் தொழில்துறை வடஅமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் உள்ள கணக்கிடும் கருவியைச் சார்ந்திருந்தது. புதிய கரிமக் கணிப்பான் சிங்கப்பூருக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.


