சாங்கி விமான நிலையப் புறப்பகுதி (Airside) ஊழியர்களின் பணியிடச் சூழலை மேம்படுத்தும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட ஓய்விடங்கள், இரண்டாவது ‘ஏர்சைடு கஃபே’, கழிவறைகளில் மேம்பட்ட விளக்கொளி, இயற்கையான காற்றோட்டம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
சாங்கி விமான நிலையத்தின் 30வது வருடாந்தரக் கொண்டாட்ட நிகழ்வின்போது, போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இதனை அறிவித்தார்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) அக்கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
குடிநுழைவு நடைமுறையைத் தாண்டியபின் உள்ள விமான நிலையப் பகுதி ‘ஏர்சைடு’ என அழைக்கப்படுகிறது.
இரண்டாவது ‘ஏர்சைடு கஃபே’ 2026ஆம் ஆண்டில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பயணப்பைகளைக் கையாளும் பகுதியில் உள்ள ஓய்விட, உணவருந்தும் பகுதிகளும் இவ்வாண்டு இறுதிக்குள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு முனையத்திலும் ஒன்று என்ற வகையில், அத்தகைய நான்கு பகுதிகள் அங்கு உள்ளன.
இதன்மூலம் ஊழியர்கள் இடைவேளையின்போது சற்று ஓய்வெடுக்க, சிற்றுண்டி அல்லது உணவருந்த வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்காது.
மேலும், புறப்பகுதிகளில் சாத்தியமிருந்தால் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அப்பகுதிகளில் இப்போதுள்ள கழிவறைகளில் விளக்கொளி, காற்றோட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் திரு சீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத் தாக்கத்தைத் தணிக்க, பயணப்பைகளைக் கையாளும் இடங்களில் கூடுதல் மின்விசிறிகள் பொருத்தப்படும். அத்துடன், அங்கு சுற்றுப்புற வெப்பநிலையைக் குறைப்பது தொடர்பான புதிய வழிமுறைகளைச் சோதித்துப் பார்க்கும் முயற்சிகளையும் சாங்கி விமான நிலையக் குழுமம் தொடரும்.
ஊழியர்களுக்குச் சூரிய வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க ஏதுவாக, இடி மின்னல் நேரங்களில் ஊழியர்கள் தஞ்சமடைவதற்காக அமைக்கப்பட்டுள்ள காப்பிடங்களில் கூடுதல் இருக்கைகளும் மின்விசிறிகளும் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் சீ தெரிவித்துள்ளார்.
பயணிகள் விமானப் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வளர்ச்சியைக் கைக்கொள்ள ஏதுவான நிலையில் சாங்கி விமான நிலையம் இருப்பதை உறுதிப்படுத்த முதலீடுகள் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
அண்மையில், ஐந்தாம் முனையக் கட்டுமானம் உட்பட சாங்கி விமான நிலைய வளர்ச்சி நிதிக்கு 5 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று வரவுசெலவுத் திட்ட அறிக்கையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு ஜனவரியில் சாங்கி விமான நிலையம் 6.16 மில்லியன் பயணிகளைக் கையாண்டதாக அமைச்சர் சீ தெரிவித்தார். இது, 2024 ஜனவரியைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகம்.
ஜனவரி மாதத்தில் அவ்விமான நிலையத்தை ஆறு மில்லியன் பயணிகள் பயன்படுத்தியதும் இதுவே முதன்முறை.