படிப்பு முடித்த ஓராண்டில் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலை

படிப்பு முடித்த ஓராண்டில் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 9:38 pm

2 mins read

இறுதித் தேர்வுகள் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகும் வேலையின்றி இருந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் பத்தில் கிட்டத்தட்ட ஏழு பேருக்கு ஓராண்டுக்குள் வேலை கிடைத்துவிட்டதாக அரசாங்கத்தின் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 3) எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ஆறு மாத முடிவில் வேலையின்றி இருந்த மற்ற உயர்கல்வி நிலையங்களின் பட்டதாரிகள் இடையேயும் அதேபோன்ற முன்னேற்றம் காணப்படுவதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

படிப்பை முடித்து ஆறு மாதங்களுக்குப் பிறகும் வேலையின்றி இருந்த பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளில் பத்தில் கிட்டத்தட்ட எட்டுப் பேர், ஓராண்டுக்குள் சம்பளத்துடன்கூடிய வேலையைப் பெற்றனர் அல்லது உள்ளூர் உயர்கல்வி நிலையங்களில் முழுநேரப் படிப்புகளில் சேர்ந்தனர்.

தொழில்நுட்பக் கல்விக் கழகப் பட்டதாரிகளிடையே அந்த விகிதம் பத்தில் ஒன்பது பேராகப் பதிவானது. கடந்த 2025ஆம் ஆண்டில் படிப்பை முடித்து ஓராண்டுக்குப் பிறகும் வேலையின்றி இருந்த பட்டதாரிகளின் விகிதம் குறித்தும், தொடர்ந்து வேலையின்றி இருப்பவர்களுக்கான ஆதரவு குறித்தும் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லீ பதிலளித்தார்.

புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் மந்தமாக இருப்பதாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்து வெளியான ஆக அண்மைய தரவுகள், வேலைச் சந்தை குறித்த முழுமையான நிலவரத்தை அளிக்கின்றன.

அத்துடன், புதிதாக வேலை தேடுபவர்கள் வேலை பெறக் கூடுதல் காலம் எடுத்துக்கொண்டாலும், இறுதியில் அவர்களில் பெரும்பாலானோர் வேலையைப் பெற்றுவிடுகின்றனர் என்பதையும் அவை காட்டுகின்றன.

பட்டதாரி வேலைவாய்ப்புக் கருத்தாய்வின் ஆக அண்மைய தரவுகள் கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டன. சென்ற ஆண்டு படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு முழுநேரப் வேலைகளைப் பெற்ற பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் விகிதம் 74.4 விழுக்காடாகக் குறைந்தது. 2024ஆம் ஆண்டில் அது 79.4 விழுக்காடாக இருந்தது.

கடந்தகால புள்ளிவிவரங்களின் அடிப்படையில், படிப்பு முடிந்து ஆறு மாதங்கள் கடந்த பின்னர் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிப்பதாக ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்