சிஙகப்பூரில் இரண்டு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடுகிறார்கள். இது சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மணி நேர திரை நேர வரம்பை மீறுகிறது.
செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முதலாவது ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, இந்த எண்ணிக்கை வார இறுதி நாள்களில் 81 விழுக்காட்டுக்கு அதிகரிக்கிறது.
பிப்ரவரியில் நடத்தப்பட்ட மின்னிலக்கப் பெற்றோர் ஆய்வில், சிங்கப்பூரில் இரண்டு முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள 1,986 பெற்றோர் பங்கேற்றனர்.
குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் மின்னிலக்கச் சாதனங்களில் (திறன்பேசிகள், கையடக்க கணினிகள், மேசைக் கணினிகள், தொலைக்காட்சி) பொழுதுபோக்குக்காகச் செலவிடுகிறார்கள். இது தொடர்பில் தங்கள் கவலைகள் என்ன, அவர்களுக்கு எந்த வகையான உதவி தேவைப்படுகிறது போன்ற கேள்விகள் பெற்றோரிடம் கேட்கப்பட்டன.
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மின்னிலக்கச் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும் என்று அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியில் பெற்றோரைச் சிறப்பாக ஆதரிக்க அரசாங்கத்துக்கு இந்த முடிவுகள் உதவும் என்றும் அது கூறியது.
பள்ளியில் கல்வி தொடர்பான திரை நேரத்திற்கான பரிந்துரைகளை அமைப்புகள் வழங்கவில்லை. அமைச்சும் இந்த ஆய்வில் பள்ளி தொடர்பான திரை நேரத்தையும் சேர்க்கவில்லை.
ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளில், 27 விழுக்காட்டினர் வார நாள்களில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மணிநேரத்தை விட அதிகமாக மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடுகிறார்கள். இந்த எண்ணிக்கை வார இறுதி நாள்களில் 55 விழுக்காடாக இரட்டிப்பாகிறது.
10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், வார நாள்களில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மணிநேரத்தை விட அதிகமாக மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடுகிறார்கள். மேலும் வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை 71 விழுக்காடாக அதிகரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தைகளும் இளம் பருவத்தினரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்கும் தேசிய சுகாதார உத்தியின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு ஜனவரி மாதம் சுகாதார அமைச்சு இந்தக் கடுமையான திரை பயன்பாட்டு வழிகாட்டுதல்களை அறிவித்தது.
குழந்தைகளை ஆக்கிரமிக்கவோ அல்லது கவனத்தை சிதறடிக்கவோ திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், உணவு நேரங்களில் திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சு பெற்றோருக்கு அறிவுறுத்தியது.
“குழந்தை வளர்ப்பு என்பது எப்போதுமே சவாலானது. மேலும் மின்னிலக்க யுகத்தில் இது மிகவும் சிக்கலானதாக மாற்றப்பட்டுள்ளது,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
“விளையாட்டு அடிப்படையிலான குழந்தைப் பருவத்திற்குத் திரும்புவதற்கு நேரம் எடுக்கும். இது குழந்தைகளின் மின்னிலக்கப் பழக்கவழக்கங்களில் விதிமுறைகளை மறுவடிவமைப்பதில் இருந்து தொடங்குகிறது,” என்று திருமதி டியோ கூறினார்.