நகர மறுசீரமைப்பு ஆணையம் அண்மையில் வெளியிட்ட பெருந்திட்டம் 2025க்கான நகல் அறிக்கையின்கீழ், தெம்பனிஸ் வட்டார நிலையத்தில் கூடுதலான வீடுகள், அலுவலகங்கள், பொது வசதிகள் ஆகியவை அமையவிருக்கின்றன.
அலுவலகங்களையும் பொழுதுபோக்கு வசதிகளையும் வீடுகளுக்கு அருகே கொண்டுவர இது உதவும்.
வருங்காலத்தில் அந்த நிலையம், புதிய வேலை-வாழ்க்கை-விளையாட்டுப் போக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை அவை உறுதிசெய்யும்.
வேலைவாய்ப்புகளை நகரின் மத்திய பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே கொண்டுவரும் உத்தியை சிங்கப்பூர் 1991ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமையும்.
தெம்பனிஸ் வட்டார நிலையம் 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஏறத்தாழ 37.5 ஹெக்டர் நிலப்பரப்பில் அது அமைந்துள்ளது.
பெருந்திட்ட நகலின்படி, அங்குக் குறைந்தது இரு குடியிருப்பு நிலப் பகுதிகளும் நான்கு வர்த்தக நிலப் பகுதிகளும் அமையக்கூடும்.
வர்த்தக நிலப் பகுதிகளில் மூன்று, அலுவலகம், குடியிருப்பு எனக் கலவையாகக் கட்ட முடியும் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள இடங்களில் அமைந்துள்ளன. தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வர்த்தக புளோக் ஒன்று, மத்திய சேம நிதிக் கழகக் கட்டடம் ஆகியவை அவை.
தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மசகோஸ் ஸுல்கிஃப்லி, நகரின் மத்திய பகுதியில் புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்தை அமைப்பது குறித்து அரசாங்க அமைப்புகள் ஆராய்வதாகக் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தெம்பனிஸ் ரயில் நிலையங்களை டௌன்டவுன் பாதையுடனும் கிழக்கு-மேற்குப் பாதையுடனும் பேருந்துச் சந்திப்புடனும் இணைப்பதும் இதில் அடங்கக்கூடும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆணையத்தின் பெருந்திட்ட நகல் அறிக்கை கடந்த ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுப் பிற்பாதியில் அது நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்கீழ், தெம்பனிஸ் நகரின் மத்திய பகுதியில் கார்களின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
தெம்பனிஸ் சென்ட்ரல் 5ல், தெம்பனிஸ் மால் கடைத்தொகுதிக்கும் கிழக்கு-மேற்குப் பாதையில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதி விரைவில் நடந்துசெல்வோருக்கு மட்டுமானதாக மாற்றப்படும்.
இந்த ஆண்டுப் பிற்பகுதியில் அதற்கான பணிகள் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது.
தெம்பனிஸ் நகர மத்தியில் நடந்துசெல்வோருக்கு மட்டுமான பசுமைச் சாலைகள், சமூகச் சாலைகள் போன்றவற்றை அமைப்பது குறித்தும் நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மத்திய சேமநிதிக் கழகக் கட்டடத்துக்கு அருகே தற்போது பேருந்துச் சந்திப்பு நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் புதிய பொது வசதி ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.
இதற்கான பணித் திட்டங்களை வரையும் விதமாக, பங்காளித்துவ அமைப்புகளுடனும் குடியிருப்பாளர்களுடனும் அரசாங்க அமைப்புகள் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.