பொறியாளர்கள், தொழில்துறை வல்லுநர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு

பொறியாளர்கள், தொழில்துறை வல்லுநர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு

2 mins read
நிதி, பொறியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிமாக எதிர்பார்க்கப்படுகிறது
7efaad05-0744-454a-90ef-0c6f0a764600
மென்பொருள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வுகளில் திறன்பெற்றோர்கள் நிதி மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் தேவைப்படுகிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டில் இருந்த மொத்த வேலை வாய்ப்புகளில், 49.3 விழுக்காடு புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகள் ஆகும். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 45.7 விழுக்காடாக இருந்தது.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கான தேவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எனவே, இங்குள்ள வேலைச் சந்தை வெறும் இடமாற்றங்களுக்கு மட்டுமல்லாமல், வர்த்தக விரிவாக்கத்தின் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது என்று மனிதவள அமைச்சு ஆண்டுதோறும் வெளியிடும் வேலை காலியிடங்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்தது.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு, நிபுணத்துவச் சேவைகள், நிதி மற்றும் காப்பீட்டுச் சேவைகள் ஆகிய துறைகளில், புதிதாக உருவாக்கப்பட்ட வேலைக்காலியிடங்களின் விகிதம் மொத்த சராசரியை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டைப்போல ஆசிரியர் துறை, நிபுணத்துவப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்கு அதிக தேவை இருந்தது. குறிப்பாக நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கு (PMET) அதிக வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டும் இருந்தன.

மென்பொருள் வடிவமைப்பு, வலைத்தளம், பலவகை ஊடகம், மின்விளையாட்டு, செயலி தயாரிப்பு, கணினி அமைப்பாய்வு, தரவு விஞ்ஞானம் போன்ற துறைகளில் நிபணத்துவம் பெற்றோர்களுக்கான வேலை வாய்ப்பு உச்சத்தில் உள்ளது.

டிசம்பர் மாத ஒட்டுமொத்த வேலைவாய்ப்புத் தரவின்படி, ஒவ்வொரு 100 வேலை தேடுவோருக்கு 158 வேலை வாய்ப்புகள் இருந்துள்ளன. அது கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்த 164 வாய்ப்புகளை விடக் குறைவாகும்.

‘பிஎம்இடி’ வகை ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு 2025ஆம் ஆண்டில் 38,200 என ஏற்றம் கண்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் இது 35,400ஆக இருந்தது.

அதேசமயம், பிஎம்இடி அல்லாத வேலை வாய்ப்புகள் 2024ஆம் ஆண்டில் இருந்த 26,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 2025ஆம் ஆண்டில் 29,600 என உயர்ந்துள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி இதன் காரணமாகும்.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் ஆட்குறைப்பு விகிதம் கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 1,000 ஊழியர்களில் 10.1 ஊழியர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டிலேயே ஆக அதிக ஊழியர்கள் சிங்கப்பூரில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு, நிபுணத்துவ சேவைகள் போன்றவை ஆட்குறைப்பால் அதிகம் பாதிப்படைந்த துறைகளாகும்.

வேலை வாய்ப்பு அதிகம் உள்ள நிதி, பொறியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அத்துறைகள் மென்பொருள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு போன்ற திறன்களை அதிகம் சார்ந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்