இவ்வாண்டு அக்டோபர் 3 முதல் 5 வரை நடக்கவுள்ள சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்தில் ‘ராக்’ இசைக்குழு ஃபூ ஃஃபைட்டர்ஸ், இசைக்கலைஞர் ஆலன் வாக்கர் ஆகியோர் இசை அங்கங்களைப் படைக்கவுள்ளதாக நிகழ்ச்சியின் ஆதரவு நிறுவனமான சிங்கப்பூர் ஜிபி தெரிவித்துள்ளது.
சிஎல், கிரவுடட் ஹவுஸ், தி ஸ்மாஷிங் பம்ப்கின்ஸ், ஜி டிராகன், எல்டன் ஜான் ஆகிய நட்சத்திரங்களும் இசைக்குழுக்களும் பந்தயத்தின்போது நிகழ்ச்சி அங்கங்களைப் படைப்பர் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்புது அங்கங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
வரும் வாரங்களில் மேலும் அதிகமான கண்கவர் நிகழ்ச்சி அங்கங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவ்வார இறுதி ரசிகர்களுக்கு மறக்கமுடியாததாக அமையும் என்றும் சிங்கப்பூர் ஜிபி கூறியுள்ளது.
ரசிகர்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் தொடங்கி வளர்ந்துவரும் நட்சத்திரங்கள் எனப் பலரது நிகழ்ச்சிகள் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் வடிவைமைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூர் கிராண்ட் பிரீ குறித்தும் இசை நிகழ்ச்சிகள் குறித்தும் கூடுதல் விவரமறிய சிங்கப்பூர் ஜிபி இணையத்தளத்தை நாடலாம்.

