தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மைக்கு மாற மேலும் பல தேசியத் தரங்கள்

2 mins read
0c4bd24a-4443-4a8a-b4ba-f8abe3c4f0d0
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கருத்தரங்கில் உரையாற்றும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப்ரி சியாவ். - படம்: என்டர்பிரைஸ் சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிறுவனங்கள் சுற்றுப்புறம் காக்கும் நீடித்த நிலைத்தன்மை நடைமுறைகளுக்கு மாற உதவியாக, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மேலும் பல தேசிய, அனைத்துலகத் தரங்கள் நடப்புக்கு வரவிருக்கின்றன.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, அடுத்த ஈராண்டுகளில் சிங்கப்பூர் தரங்கள் மன்றம், சிங்கப்பூர் நற்சான்றளிப்பு மன்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த 25க்கும் மேற்பட்ட தேசியத் தரங்களையும் சான்றளிப்புத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் அல்லது திருத்தியமைக்கும்.

இவற்றுள் சில எரிசக்தித் துறை, கடல்துறை ஆகியவற்றில் கரியமிலவாயு வெளியாக்கத்தைக் குறைக்கத் துணைபுரியும். மற்ற சில தரங்கள், எல்லா நிறுவனங்களும் கரியமிலவாயு வெளியாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், எரிசக்தி பயன்பாடு, தண்ணீர்ச் சிக்கனத்திறன், பொருள் பயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவி புரியும் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப்ரி சியாவ் வெள்ளிக்கிழமை கூறினார்.

“துறையினரும் அமைப்புகளும் தெளிவான இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் வகுப்பதற்கும், முன்னேற்றத்தை அளவிடுவதற்கும், புத்தாக்கத்தைத் தூண்டுவதற்கும் தரங்கள் உதவும்,” என்று மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தரங்கள் மாநாட்டில் அவர் கூறினார்.

தரங்களைப் பின்பற்றுவது பெரும்பாலும் நிறுவனங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால், தங்களது தயாரிப்புகளும் சேவைகளும் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நிறுவனங்கள் தரங்களைப் பின்பற்றலாம். சில தரங்கள் அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்படலாம்.

நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தரங்களை நிலைநாட்டுவதை சான்றளிப்புத் திட்டங்கள் உறுதிசெய்கின்றன.

தற்போது நீடித்த நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் 93 தரங்களும் 15 சான்றளிப்புத் திட்டங்களும் நடப்பில் உள்ளன.

2025ல் நடப்புக்கு வரவிருக்கும் ஒரு தேசியத் தரம், ஹைட்ரஜன் வாயுவை எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டிகளை நிர்ணயிக்கும்.

புதிய தரங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்