வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (மசெக) சார்பில் 30க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் களமிறக்கப்படவுள்ளனர்.
தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை மசெக உறுதிசெய்துவிட்டதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மசெகவின் லிம்பாங் வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இதுவரை இல்லாத வகையில் ஆக அதிகமான புதுமுகங்களை இந்தத் தேர்தலில் அறிமுகம் செய்யவுள்ளதாகப் பிரதமர் வோங் கூறினார்.
மசெகவைப் புதுமையாக்க புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்படுவர் என்றும் விரைவில் வெளிவரவிருக்கும் தேர்தல் அறிக்கையின் மூலம் மக்கள், மசெகவின் திட்டங்களை அறிந்து கொள்வார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
புதுமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் வரும் நாள்களில் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுமுகங்களை மசெக ஏன் விரைவாக அறிமுகப்படுத்துகிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மசெக அணிக்குப் புத்தாற்றலைப் பாய்ச்ச காலம் கடத்தினால் மாற்றங்கள் எதிர்காலத்தில் கடினமாகும்,” என்று பிரதமர் பதிலளித்தார்.
எச்சரிக்கைகள் விடுப்பதன் மூலம் ஆளும் கட்சி அச்சுறுத்துவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டதற்கு, “பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்,” என்று திரு வோங் கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மசெக தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்றி வருகிறது என்ற அவர், தாமும் தம் குழுவினரும் எப்போதும் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் தொடர்ந்து தேவையானதைச் செய்துகொண்டே இருப்போம் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“எல்லா மக்களுக்கும் முன்னேறும் வாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை வளத்தையும் நாங்கள் வழங்கியுள்ளோம். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப எங்களால் முடிந்ததைச் செய்வோம். எனவே, எனக்கும் என் குழுவினருக்கும் மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார் திரு வோங்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், துணை அமைச்சர் கான் கிம் யோங் போன்ற மூத்த உறுப்பினர்கள் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூர் தற்போது இருந்து வருகிறது. உலகளவில் பல மாற்றங்களை எதிர்கொண்டுவரும் வேளையில், சிங்கப்பூரை வழிநடத்த நம்பகமான அணியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இதை ஒரு முக்கியப் பொறுப்பாகக் கருதுகிறேன். நிலையற்ற சூழலில் நம் எதிர்காலத்தை வலுப்படுத்துவது அவசியம்,” என்ற அவர், பரபரப்பு நிறைந்த ஒரு தேர்தலில் போட்டியிட தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, 2025 பொதுத் தேர்தலில் மசெக சார்பில் போட்டியிடத் தயாராக இருக்கும் எட்டுப் புதுமுகங்களின் பெயர்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டுள்ளார்.
திருமதி கோ ஹன்யான், திரு ஷோன் லோ, திருமதி கசேண்ட்ரா லீ, டாக்டர் ஹமீத் ரசாக், திருமதி டயானா பாங், திருமதி கோ பெய் மிங், திருமதி ஜாஸ்மின் லாவ், திருமதி இங் ஷி சுவான் ஆகியோரே அந்த எண்மர்.
ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் வோங் இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் அந்த எட்டு வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பொது, தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள்.