சிங்கப்பூரில் வடிவமைப்பு சாராத வேலைகளில் இருப்போருக்கும் வடிவமைப்புத் திறன் உதவும் என்பது தெரிய வந்துள்ளது.
வடிவமைப்பு சாராத வேலைகளில் இருப்போரில் 70 விழுக்காட்டினருக்கு வடிவமைப்புத் திறன் தேவைப்படுவதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு, பொறியியல், வர்த்தக மேம்பாடு போன்றவை தொடர்பிலான வேலைகளுக்கு அது பொருந்தக்கூடும்.
எடுத்துக்காட்டாக, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் மென்பொருள்களை உருவாக்க மென்பொருள் மேம்பாட்டாளர்கள் வடிவமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் உணவக நிர்வாகிகள், சமையலறையைக் கவனித்துக்கொள்வதையும் தாண்டி வாடிக்கையாளர்களை ஈர்க்க விளம்பரம் தொடர்பிலான திறன்களைக் கொண்டிருக்கவேண்டும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் நான்காவது முறையாக வெளியிட்டிருக்கும் ‘வருங்காலப் பொருளியலுக்குத் தேவைப்படும் திறன்கள்’ அறிக்கையைக் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் புதன்கிழமை (ஜனவரி 22) வெளியிட்டார்.
அறிக்கையில் வடிவமைப்புத் திறன்கள் குறித்த அங்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தாக்க சிந்தனை, யாருக்கும் இதுவரை தோன்றாத புதிய யோசனைகள் அல்லது திட்டங்களை உருவாக்கும் ஆற்றல் ஆகியவை தொடர்பான திறன்கள் அதில் இடம்பெறும்.
40 வடிவமைப்புத் திறன்கள், 2019ஆம் ஆண்டிலிருந்து கூடுதலாக மற்ற வேலைகளுக்குப் பயன்படக்கூடியவையாக உருவெடுத்துள்ளன. வடிவமைத்தல், விளம்பர அம்சங்களைக் கவனித்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை அத்தகைய திறன்களில் அடங்கும்.
அப்படியென்றால் கூடுதல் வேலை வாய்ப்புகளுக்கு அத்திறன்கள் தேவைப்படுகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பணியாற்றும் 150,000 வடிவமைப்பு நிபுணர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வடிவமைப்புத் துறையில் வேலை செய்கின்றனர். மேடைக் கலைகள், பொருள் வடிவமைப்பு போன்றவை சார்ந்த வேலைகளை அவர்கள் பார்க்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தகம், நிதி நிர்வாகம், மனிதர்களைக் கையாள்வது ஆகியவை தொடர்பான திறன்களுக்கு வடிவமைப்புத் துறையில் தேவை அதிகம் இருப்பது அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
வடிவமைப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தையும் அறிக்கை ஆராய்வதாக மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் திருவாட்டி கான் தெரிவித்தார்.
வடிவமைப்பு சாராத துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கும் வடிவமைப்புத் திறன்கள் மேலும் தேவைப்படும் என்ற விழிப்புணர்வையும் அறிக்கை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“வடிவமைப்பு சார்ந்த பணிகளுக்கு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (GenAI) கைகொடுக்கும். அதேவேளையில், அம்முறைகளை சரியான முறையில் பயன்படுத்த வழிகாட்டுதல் தேவை,” என்று திருவாட்டி கான் சுட்டினார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரின் கருத்தாய்வில் பங்கேற்ற சுமார் 100 வடிவமைப்பு நிபுணர்களில் பாதிக்கும் அதிகமானோர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.