ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு அதிகமான பயணிகள் முன்கூட்டியே பயண ஏற்பாடுகளை உறுதிசெய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பயணத்துக்கு மட்டுமின்றி அந்த விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக அவர்கள் முன்கூட்டி உறுதி செய்தனர்.
2025ஆம் ஆண்டில் மட்டும் 560,000 பயணிகள் முன்கூட்டியே பயண உறுதி செய்தனர். இது 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 8 விழுக்காடு அதிகம். மேலும், கடைத்தொகுதியுடன் இணைந்த அந்த விமான நிலையம் திறக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 56 விழுக்காடு அதிகம்.
ஜூவல் சாங்கி விமான நிலையம் ஒரு மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பதைப் பயணிகள் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அறிந்திருந்தனர். மேலும், அங்குள்ள முன்கூட்டியே பதிவு செய்யும் வசதிகளின் மூலம், விமானம் புறப்படுவதற்கு ஏழு மணி நேரத்திற்கு முன்பே தங்களது பயண உடைமைகளை அவர்களால் ஒப்படைக்க முடிந்தது.
தானியங்கி பயணப்பெட்டி ஒப்படைப்பு இயந்திரங்களைக் கொண்ட இந்த முன்கூட்டிய பயண உறுதி சேவையானது, தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனத்தைப் பொறுத்து, விமானம் புறப்படும் நேரத்திற்கு மூன்று முதல் 24 மணி நேரத்திற்கு முன்பாக ‘செக்-இன்’ செய்ய பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது, விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம்வரை பயண உறுதிசெய்யக்கூடிய வழக்கமான போக்கைக் காட்டிலும் கூடுதல் நேரமாகும்.
முன்கூட்டியே பயண உறுதி செய்யும் முன்னோடி நடவடிக்கையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், துருக்கி ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக், ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட இருபது விமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அந்த நிறுவனங்களின் பயணிகள் முன்கூட்டியே பயண உறுதிசெய்த விவரத்தை சாங்கி விமானநிலையக் குழுமம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டு ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துசென்றவர்களின் எண்ணிக்கை 81 மில்லியனைக் கடந்தது. மொத்த வருகையாளர்களில் மூனறில் ஒருவர் வெளிநாட்டுப் பயணிகள்.
பயணிகள் விருப்பப்பட்டு முன்கூட்டியே பயணத்தை உறுதிசெய்து விமான நிலையத்திற்கு வந்துவிடுகிறார்கள். அதன்மூலம், தங்களது விமானம் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் இருக்கும் நேரத்தை அவர்கள் நீட்டித்துக்கொள்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்காகவே விமான நிலையத்திற்கு வருவதைக் காட்டிலும் விமான நிலைய வசதிகளை அனுபவிக்க அவர்கள் அவ்வாறு முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள் என்றும் குழுமத்தின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

