18 நாள் வறண்ட வானிலைக்குப் பிறகு ஆகஸ்ட் முற்பாதியில் கூடுதல் மழை பெய்யுமென முன்னுரைப்பு

18 நாள் வறண்ட வானிலைக்குப் பிறகு ஆகஸ்ட் முற்பாதியில் கூடுதல் மழை பெய்யுமென முன்னுரைப்பு

2 mins read
32afff87-9b82-4a0d-9b56-bad58692384d
ஆகஸ்ட் மாத முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் காலை, பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாத முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

ஜூலை 13ஆம் தேதி இடியுடன் கூடிய மழை பெய்ததை அடுத்து 18 நாள்கள் நீடித்த வறண்ட வானிலை முடிவுக்கு வந்ததையும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் ஆக நீண்டகாலம் வறண்ட வானிலை நிலவியதையும் அது சுட்டியது.

தொடர்ந்து 15 நாள்களுக்கு அன்றாட மொத்த மழைப்பொழிவு 1 மில்லிமீட்டருக்குக் குறைவாகப் பதிவானால் வறண்ட வானிலை நிலவுவதாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவியது.

கடந்த மாதப் பிற்பாதியில், சிங்கப்பூரின் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியசுக்கும் 35.2 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருந்தது. இரவிலும் அன்றாடக் குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 28 டிகிரி செல்சியசுக்குமேல் பதிவானது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாத முற்பகுதியில் தீவின் பல்வேறு பகுதிகளில், பெரும்பாலான நாள்களில் காலை, பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரிரு நாள்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாத முற்பாதியில் மொத்த மழைப்பொழிவு கிட்டத்தட்ட சராசரி அளவாக இருக்கும்.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் இரவுநேர வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்குமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்