சிங்கப்பூரில் கூடுதல் மூத்தோர் வேலையில் தொடர்வதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ஓய்வுக்கால வயதும் மறுவேலை பணி நியமன் வயதும் உயர்த்தப்பட்டதை அடுத்து அந்தப் போக்கு நிலவுகிறது.
2022 ஜூலை 1ஆம் தேதி வேலையிலிருந்து ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 62லிருந்து 63க்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரிடையே வேலைக்குச் சேர்ந்தோர் விகிதம் 0.4 விழுக்காடு அதிகரித்தது.
அதேபோல மறுவேலை பணி நியமன வயதும் 67லிருந்து 68க்கு உயர்ந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூத்தோர் பணியமர்த்தப்படும் விகிதம் 0.7 விழுக்காடு அதிகரித்தது.
மனிதவள அமைச்சின் மூத்த பொருளியல் நிபுணர் யுவென் விங் ஷானும் தலைமைப் பொருளியல் நிபுணர் சேமுவல் ஹுவாங்கும் ஆய்வை நடத்தினர்.
ஓய்வுக்கால வயதை உயர்த்தியதன் தாக்கத்தை அறிய 1959ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை பிறந்த கிட்டத்தட்ட 180,000 குடிமக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல மறுவேலை நியமன வயதை உயர்த்தியதன் தாக்கத்தைக் கண்டறிய 1954ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஏறக்குறைய 160,000 குடியிருப்பாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது, 55 வயதை எட்டுவதற்கு முன் நிறுவனங்களில் சேர்ந்த சிங்கப்பூரர்களான மூத்த ஊழியர்கள் 63 வயது வரை வேலை செய்யலாம்.
அத்தகையோருக்கு மறுவேலை நியமன வயதான 68 வயது வரை வேலையில் நீடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களின் வேலை திருப்திகரமானதாக இருப்பதோடு மருத்துவ ரீதியாக அவர்கள் வேலை செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு மூத்த ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் சேரும் நடைமுறை சமூக அளவில் வழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டதால் 2022ஆம் ஆண்டில் வயது வரம்பை உயர்த்தியது பலன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
“சிங்கப்பூரில் ஆயுள்காலமும் மூப்படையும் சமூகமும் அதிகரிப்பதால் ஓய்வுக்கால வயது வரம்பும் மறுவேலை நியமன் வயது வரம்பும் உயர்த்தப்பட்டது மூத்தோரைப் பாதுகாத்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதல் காலம் வேலை செய்ய வழிவகுக்கிறது,” என்று ஆய்வு குறிப்பிட்டது.
முதலாளிகளாலும் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும் என்று ஆய்வு சுட்டியது.
எனினும், மூத்தோரில் பெரும்பாலோர் 63 வயதுக்கு மேல் வேலை செய்யவில்லை என்று ஆய்வு சொன்னது. ஓய்வுக்கால வயது வரம்பை உயர்த்தும் கொள்கை மூத்தோர் வேலையிலிருந்து வெளியேறுவதை நிறுத்தவில்லை என்று அது குறிப்பிட்டது.

