தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எம்பாக்ஸ்’ தொற்றுக்கிடையிலும் ஆப்பிரிக்கா செல்லும் சிங்கப்பூரர் எண்ணிக்கை அதிகம்

2 mins read
4e45b477-7f40-49ce-8d9c-67ac07520ba2
2021ஆம் ஆண்டு கென்யாவின் கிமானா வனவிலங்குக் காப்பகத்தில் மேயும் யானைகள். பின்னணியில் பனிபடர்ந்த கிளிமஞ்சாரோ சிகரம் தெரிகிறது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஆப்பிரிக்கப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட அதிகரித்துள்ளதாகப் பயண நிறுவனங்கள் கூறியுள்ளன.

2023 செப்டம்பரில் காங்கோ குடியரசிலிருந்து புதிய, கடுமையான ‘எம்பாக்ஸ்’ கிருமித் திரிபு பரவத் தொடங்கியது. அதையடுத்து, உலகச் சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் மாதம் இந்தக் கிருமிப்பரவலைப் பொதுச் சுகாதாரக் கவலை நிலையாக அறிவித்தது.

இருப்பினும், ஆப்பிரிக்கா செல்லும் பயணிகள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்கிறது சான் பிரதர்ஸ் பயண நிறுவனம்.

சென்ற ஆண்டைவிட இப்போது தென்னாப்பிரிக்கப் பயணங்களுக்கான பதிவு ஐந்து மடங்குக்குமேல் அதிகரித்துள்ளதாக அது கூறியது.

‘எம்பாக்ஸ்’ தொடர்பான பாதுகாப்புக் கவலைகளை முன்வைத்துச் சிலர் விசாரித்தனர். இருப்பினும், யாரும் பயணத்தை ரத்து செய்யவில்லை என்கிறது அந்நிறுவனம்.

ஆப்பிரிக்கப் பயணத்தின் சிறப்பாகக் கருதப்படும் அம்சங்களில் மில்லியன்கணக்கான வனவிலங்குகள் இடம்பெயர்வதும் அடங்கும். பசும்புல்லையும் நீரையும் தேடி அவை கென்யா, டான்சானியா ஆகியவற்றின் சமவெளிகளைக் கடந்துசெல்லும். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இதைக் காண்பதற்கான சிறந்த காலகட்டமாகும்.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தோர் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்ததாக சான் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஸாம்பியாவுக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையே அமைந்துள்ள விக்டோரியா அருவி, உலகின் ஆகப் பெரிய அருவியாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்கா செல்லும் சுற்றுப்பயணிகளிடையே அது மிகவும் புகழ்பெற்ற இடமாக விளங்குவதாக நிறுவனம் சொல்லிற்று.

சொகுசுப் பயண முகவரான ஸ்காட் டன் நிறுவனம், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஆப்பிரிக்கப் பயணம் குறித்து விசாரிப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியது. பயணங்களுக்கு முன்பதிவு செய்தோர் விகிதமும் 28 விழுக்காடு கூடியதாக அது சொன்னது.

‘த டிராவல் கார்ப்பரேஷன்’ நிறுவனமும் ஆப்பிரிக்கா செல்லும் பயணிகள் விகிதம் 10 விழுக்காடு கூடியதாகவும் 18 முதல் 35 வயதுடைய இளம் பயணிகள் விகிதம் 30 விழுக்காடு அதிகரித்ததாகவும் தெரிவித்தது.

ஆப்பிரிக்காவின் தனித்துவமான ‘சஃபாரி’ எனப்படும் விலங்குகளை அவற்றின் இயல்பான வாழ்விடத்தில் காணும் பயணம், மாசுபடாத இயற்கை வளங்கள் போன்றவற்றைக் காண்பதில் சிங்கப்பூரர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்