கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் அதிக சிங்கப்பூரர்கள் உடன்பாடு: உள்துறை அமைச்சு

3 mins read
0c24f605-041b-46fe-b460-0dbffc4afbef
2023ஆம் ஆண்டு கருத்தாய்வில், கட்டாய மரண தண்டனை விதிப்பதை உறுதியாக ஒப்புக்கொண்ட அல்லது ஒப்புக்கொண்டவர்களின் விகிதத்தில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொலை, அதிக அளவில் போதைப்பொருளைக் கடத்துதல், துப்பாக்கிச்சூடு போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அதிகமான சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உள்துறை அமைச்சு 2023ஆம் ஆண்டு நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் முக்கால்வாசிப்பேர் அல்லது 77.4 விழுக்காட்டினர், அதனைத் தாங்கள் உறுதியாக ஒப்புக்கொள்வதாக அல்லது ஒப்புக்கொள்வதாகக் கூறினர்.

இது 2021ல் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் இவ்வாறு கூறிய 73.7 விழுக்காட்டினருடன் ஒப்பிடப்பட்டது.

மரண தண்டனை மிகவும் கடுமையான குற்றங்களைத் தடுக்கிறது என்றும் இதுபோன்ற குற்றங்கள் கடுமையானவை, சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன எனத் தாங்கள் உணர்வதாகவும் மரண தண்டனை குற்றத்துடன் ஒத்துப்போகிறது என்றும் கூறினர். வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கருத்தாய்வு முடிவுகளை வெளியிட்ட உள்துறை அமைச்சு இதனைக் கூறியது.

மரண தண்டனை குறித்த பொதுமக்களின் கருத்துகளை நன்கு புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்தக் கருத்தாய்வு, உள்துறை அமைச்சு நியமித்த ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

சென்ற 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரை 15 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய கிட்டத்தட்ட 2,000 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுடன் நேரில் கருத்தாய்வு இடம்பெற்றது.

சிங்கப்பூர் மக்கள்தொகையின் முழுமையான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்தாய்வுகள் வயது, இனம், பாலியல், குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் பங்கேற்பு தேர்வு செய்யப்பட்டது.

இரு ஆய்வுகளுக்குமிடையே முடிவுகளின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதிசெய்ய, இரண்டிலும் கேள்விகள் பொதுவாக ஒரே மாதிரியாகவே இருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

2023ன் கருத்தாய்வில், கட்டாய மரண தண்டனையை உறுதியாக ஒப்புக்கொண்ட, ஒப்புக்கொண்டவர்கள் எண்ணிக்கை புள்ளிவிவர ரீதியாக அதிகரித்துள்ளது.

கொலைக்குக் கட்டாய மரண தண்டனை தகுந்த தண்டனை என 85% உறுதியாக ஒப்புக்கொண்டனர் அல்லது ஒப்புக்கொண்டனர். இது 2021ன் 80.5 விழுக்காட்டைவிட 4.5% அதிகம்.

துப்பாக்கிச்சூடு குற்றங்களைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 2023ல் 74.3% ஆக இருந்தது. 2021ன் 71.1 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருள் கடத்தும் குற்றத்துக்கு 2021ல் 65.6%ஆக இருந்த இந்த விகிதம் 2023ல் 68.7%ஆக இருந்தது.

இந்த மூன்று குற்றங்களுக்கும் கட்டாய மரண தண்டனை விதிப்பதில் உடன்படாதவர்களிடம் விருப்புரிமை மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை ஆகிய இரண்டில் எது பொருத்தமாக இருக்கும் எனக் கேட்கப்பட்டது.

2013ல், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், மரணத்திற்குப் பதிலாக, போதைப்பொருளை எடுத்து வருபவர்களுக்கு ஆயுள் தண்டனை, பிரம்படி விதிக்க நீதிபதிகளுக்கு விருப்புரிமை வழங்கும் வகையில் சட்டம் மாற்றப்பட்டது.

உதாரணமாக, குற்றவாளி விநியோகராகச் செயல்பட்டார் என்பதையும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒடுக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

சிங்கப்பூர்ச் சிறைத்துறை புள்ளிவிவரங்களின்படி, 2023ல் ஐந்து மரண தண்டனைகளும் 2022ல் 11 மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன. 16 பேரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள்.

2023ன் கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள், மிகக் கடுமையான குற்றங்களைத் தடுக்க மரண தண்டனை பொருத்தமானது என ஒப்புக்கொண்டனர்.

போதைப் பொருள் கடத்தலைப் பொறுத்தவரை, 87.9 விழுக்காட்டினர் அதை ஒப்புக்கொண்டனர். 2021 ஆய்வின் 83.2 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

2021ஆம் ஆண்டைப் போலவே, 2023ன் கருத்தாய்விலும் பெரும்பாலானோர் சிங்கப்பூரின் குற்றவியல் நீதி அமைப்பு மரண தண்டனை வழக்குகளைச் சரியான முறையில் கையாளும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

மரண தண்டனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் நியாயமான, கடுமையான விசாரணைகளுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டவர்கள் என்றும் நம்புகின்றனர். கிட்டத்தட்ட 85% தவறான மரண தண்டனைகள் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய போதுமான பாதுகாப்புகள் இருப்பதாக நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்