இணையத் துன்புறுத்தலுக்கு ஆளான சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
2c7f1d49-f67e-4b66-89ea-d3508efb58a2
2024ஆம் ஆண்டு இணையத் துன்புறுத்தல், அனுமதியின்றித் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது ஆகிய சம்பவங்களால் கூடுதலான சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - சித்திரிப்பு: பிக்சாபே

இணையத் துன்புறுத்தல், அனுமதியின்றித் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்லது படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது ஆகிய சம்பவங்களால் ஆதரவு நிலையத்தின் உதவியை நாடியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2024ல் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ஷிகேர்ஸ்@எஸ்சிடபிள்யுஓ’ எனும் நிலையம் (SheCares@SCWO), இணையத் துன்புறுத்தலுக்கு ஆளானோர்க்கு உதவி வழங்குகிறது.

அனுமதியின்றி வேண்டுமென்றே தங்கள் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டது தொடர்பில் சென்ற ஆண்டு (2024) 32 பேர் இந்த நிலையத்திடம் உதவி நாடியதாகக் கூறப்பட்டது. 2023ல் இந்த எண்ணிக்கை 13ஆக இருந்தது.

துன்புறுத்தல், இணையப் பகடிவதை (cyberbullying) ஆகிய சம்பவங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 48ஆக இருந்ததாகவும் 2024ல் அந்த எண்ணிக்கை 80ஆக அதிகரித்ததாகவும் கூறப்பட்டது.

படங்களின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோர் எண்ணிக்கை சென்ற ஆண்டு 46ஆக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டு அது 27ஆகப் பதிவானது. பாதிக்கப்பட்டோரின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளிகள் அவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பகிரப்பட்டன.

ஒட்டுமொத்தத்தில், ‘ஷிகேர்ஸ்@எஸ்சிடபிள்யுஓ’ நிலையம் சென்ற ஆண்டு 158 பேருக்கு உதவி வழங்கியதாகக் கூறப்பட்டது. 2023ல் நிலையம் செயல்படத் தொடங்கிய முதல் ஆண்டில் இவ்வாறு உதவி பெற்றோர் எண்ணிக்கை 99ஆக இருந்தது.

நிலையத்தின் உதவியை நாடியோரில் பாதிப் பேர் ஒரே நேரத்தில் பல்வேறு இணையத் துன்புறுத்தல் சம்பவங்களை எதிர்கொண்டனர்.

லாப நோக்கமற்ற அமைப்பான ‘எஸ்ஜி ஹெர் எம்பவர்மெண்ட்’ (SHE), பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்ட இணையத் துன்புறுத்தல் தொடர்பான புதிய வழிகாட்டி அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

அந்த அமைப்பின் வருடாந்தரக் கருத்தரங்கில் அவை வெளியிடப்பட்டன.

‘ஷிகேர்ஸ்@எஸ்சிடபிள்யுஓ’ நிலையத்தை, ‘எஸ்எச்இ’ அமைப்பும் சிங்கப்பூர் பெண்கள் அமைப்புக்கான மன்றமும் இணைந்து நடத்துகின்றன. உதவி தேவைப்படுவோர் தொலைபேசி மூலம் இதன் உதவியை நாடலாம். பாதிக்கப்பட்டோருக்கு இலவசச் சட்ட உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும்.

தீவிரமான இணையத் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையுடன் இணைந்து அந்த நிலையம் செயல்படுகிறது.

மேலும், தீங்கிழைக்கக்கூடிய கருத்துப் பதிவுகள் குறித்து முக்கிய இணையத்தளங்களான மெட்டா, எக்ஸ், டிக்டாக் போன்றவற்றுக்குத் தகவல் அளித்து அந்தப் பதிவுகளை நீக்குவதற்கும் நிலையம் உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்