அக்கம்பக்க உயர்நிலைப் பள்ளிகள், ‘டிஎஸ்ஏ’ எனப்படும் நேரடிப் பள்ளிச் சேர்க்கை வழியாக அதிக மாணவர்களை ஈர்ப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வை எழுதும் முன்னரே உயர்நிலைப் பள்ளியில் இடத்தைப் பெறுவதற்கு வகை செய்யும் இந்தத் திட்டம், தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அல்லது தங்கள் திறன்களை ஆதரிக்கும் உயர்நிலைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் சிலரால் விரும்பப்படுகிறது.
‘ஐபி’ என்ற ஒருங்கிணைந்த திட்டம் அல்லாத நேரடிப் பள்ளிச் சேர்க்கையின் விகிதம் கூடியுள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
‘ஐபி’ திட்டத்தில் இல்லாத மாணவர்கள், நான்கு ஆண்டுகள் கழித்து சாதாரண நிலைத் தேர்வுகளை எழுதுவர்.
‘ஐபி’ திட்டத்தில் இருப்பவர்கள் சாதாரண நிலைத் தேர்வு எழுத வேண்டிய தேவை இராமல், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மேல்நிலைத் தேர்வு எழுதுவர்.
2020ல், நேரடிப் பள்ளிச் சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் 50 விழுக்காடு, ‘ஐபி’ அல்லாத திட்டத்திற்கும் 35 விழுக்காடு ஐபி திட்டத்திற்கும் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிபுணத்துவமுள்ள தன்னாட்சிப் பள்ளிகளுக்குமாக இருந்தன.
2024ல் ‘ஐபி’ அல்லாத திட்டத்திற்கான நேரடிப் பள்ளிச் சேர்க்கை விண்ணப்பங்கள் 60 விழுக்காட்டிற்குக் கூடியது. ‘ஐபி’ திட்டத்திற்கும் நிபுணத்துவமுள்ள தன்னாட்சிப் பள்ளிகளுக்குமான விண்ணப்பங்கள் முறையே 30 விழுக்காட்டிற்கும் 10 விழுக்காட்டிற்கும் கூடின.
மாணவர்களை அதிகமாகச் சென்றடைவதற்காகக் கடந்த சில ஆண்டுகளில் நேரடிப் பள்ளிச் சேர்க்கைக்குச் செய்யப்பட்ட மாற்றங்களால் அது மேலும் பிரபலமடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, பள்ளிகள் தனது நேரடிப் பள்ளிச் சேர்க்கையை விரிவுபடுத்தி அவர்களது பலதரப்பட்ட வலிமைகளை அங்கீகரித்து மீள்திறன், தன்முனைப்பு, விழுமியங்கள், ஆர்வம், செயலாற்றல் போன்வற்றைக் கருத்தில் கொள்கின்றன.
அத்துடன், 2018ல் ‘ஐபி’யில் சேராத மாணவர்களில் 20 விழுக்காட்டினர் வரை நேரடிப் பள்ளிச் சேர்க்கை வழியாகச் சேர்க்க உயர்நிலைப் பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சு அனுமதித்துள்ளது.
தொடக்கநிலை இறுதித் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள், ஏதேனும் ஒரு திறன் அடிப்படையில் நேரடிச் சேர்க்கைக்கு அதிகபட்சம் மூன்று பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

