போர்ச்சூழல் மோசமடைந்தால் கூடுதல் ஆதரவளிக்கப்படும்: மூத்த அமைச்சர் லீ

போர்ச்சூழல் மோசமடைந்தால் கூடுதல் ஆதரவளிக்கப்படும்: மூத்த அமைச்சர் லீ

2 mins read
1aa37716-06b3-4830-8e11-8ccd3d95c784
அங் மோ கியோ தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

ஈரான் போர் தொடர்பில் நிலைமை மோசமடைந்தால் அதன் தாக்கத்தைச் சமாளிக்க உதவ சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நிலவரத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் நிலைமை மோசமடைந்தால், மேலும் உதவி வழங்க அரசாங்கம் தயாராய் இருக்கிறது என்றும் அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய இயலும் என்றும் திரு லீ, அங் மோ கியோ தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

“கடந்த சில ஆண்டுகளாக நமது வளங்களையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டுள்ளதால் (உதவ) தேவையானவை நம்மிடம் உள்ளன. அதனால், நிலைமையைக் கையாளவும் இந்த நெருக்கடியைச் சமாளிக்கவும் நாம் வலுவான நிலையில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் திரு லீ.

கணிக்க முடியாத சூழல்

மத்திய கிழக்கு நெருக்கடியாலும் ஹோர்முஸ் நீரிணை மூடலாலும் ஆக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆசிய நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரும் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அண்டை நாடுகளைப்போல அது பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு வாரப் போர்நிறுத்த ஒப்பந்தம் நடப்பில் இருப்பதோடு அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் என்ன நடக்கிறது, இனி என்ன ஆகும் ஆகியவற்றைக் கணிப்பது கடினம் என்று திரு லீ சுட்டினார்.

“ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். போர் உடனடியாக நின்றால்கூட முன்பிருந்த நிலைக்கு நம்மால் போக முடியாது.

“அப்படியே அது சாத்தியமானாலும் எரிசக்தி உற்பத்தியையும் விநியோகத்தையும் பழைய நிலைக்குத் திரும்பச் செய்ய, சேதத்தை சரிசெய்ய மாதங்கள் அல்லது ஆண்டுகள்கூட ஆகலாம்,” என்று திரு லீ விவரித்தார்.

ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

போரால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்படவிருந்த சிடிசி பற்றுச்சீட்டுகளை வரும் ஜூன் மாதமே வழங்குவது, ஒவ்வொருவருக்குமான வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகை 200 வெள்ளி அதிகரிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போரால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் துறைகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது. இணையவழி ஊழியர்கள், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் உதவி பெறுவோரில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்