கொசுக்கள், குளிரூட்டும் உடைகள்: சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான கண்காட்சி

கொசுக்கள், குளிரூட்டும் உடைகள்: சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான கண்காட்சி

படம்: சாவ்பாவ்

24 Oct 2026 - 3:01 pm

2 mins read

எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வது எப்படி இருக்கும் என்பதை நேரடியாக உணர விரும்புகிறீர்களா? ‘வோல்பாக்கியா’ கொசுக்கள் நிறைந்த ஒரு பெட்டிக்குள் உங்கள் கையை விட்டுப் பாருங்கள். அவை மனிதர்களைக் கடிக்காது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாறிவரும் பருவநிலைக்குச் சிங்கப்பூர் எவ்வாறு தயாராகி வருகிறது என்பதை வருகையாளர்களுக்கு எடுத்துரைக்கும் ஒருமாதகால நடமாடும் கண்காட்சியிலுள்ள அம்சங்களில் அதுவும் ஒன்று.

அக்கண்காட்சி ஒருங்கிணைந்த சமூக, வாழ்க்கைமுறை நடுவமான ‘ஒன் பொங்கோல்’ வளாகத்தில் முதலில் இடம்பெறும்.

டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் குடியிருப்புப் பகுதிகளில் ‘வோல்பாக்கியா’ கொசுக்கள் விடப்படுகின்றன. அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக, இத்தகைய பூச்சிகளில் கிருமி வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் தற்போது எதிர்கொண்டுவரும் புகைமூட்டத்திற்குப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங், சனிக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது கூறினார்.

செப்டம்பர் தொடக்கம் முதல், இந்தோனீசியக் காட்டுத்தீயிலிருந்து கிளம்பிய புகைமூட்டம் சிங்கப்பூரின் காற்றுத் தரத்தைப் பாதித்துள்ளது.

‘எல் நினோ’ பருவநிலையால் ஏற்பட்ட வழக்கத்தைவிட மேலும் வறட்சியான சூழலால், அந்தத் தீச்சம்பவங்கள் மோசமடைந்துள்ளன. நிலத்தை மண்தோண்டி இயந்திரங்கள் மூலம் சீரமைப்பதைவிட, குறைவான செலவாகும் என்பதால், சட்டவிரோதமாக இருந்தாலும் பரவலாகப் பின்பற்றப்பட்டுவரும் வெட்டி எரிக்கும் முறை, அங்குத் தீ பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கான், மோசமான வானிலையை எதிர்கொள்வதற்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்தப் புகைமூட்டம் சரியான நேரத்தில் நினைவூட்டியுள்ளதைச் சுட்டினார்.

புகைமூட்டம் சிங்கப்பூருக்கு ஒரு சவாலான காலகட்டமாக இருந்துள்ளதை ஒப்புக்கொண்ட திரு கான், முதியோர், கர்ப்பிணிகள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய அல்லது கூடுதல் உதவி தேவைப்படக்கூடியவர்களுக்கு உதவுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்