சிங்கப்பூரில் விலைவாசி அதிகரிக்கும் என பெரும்பாலான குடும்பங்கள் கணிப்பு: ஆய்வு

சிங்கப்பூரில் விலைவாசி அதிகரிக்கும் என பெரும்பாலான குடும்பங்கள் கணிப்பு: ஆய்வு

வரும் ஆண்டுகளில் நிதிநிலைமை மோசமடையும் என 38.6 விழுக்காட்டுக் குடும்பங்களே கவலை
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 2:31 pm

2 mins read

வரும் 2027ஆம் ஆண்டில் உள்நாட்டு, உலகளாவிய பொருளியல் மாற்றங்கள் பணவீக்கத்தை உயர்த்தும் என பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்கள் கருதுவதாக டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் (எஸ்எம்யு) இணைந்து நடத்திய காலாண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

செப்டம்பரில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் பங்கேற்ற 510 பேரில் 87.1 விழுக்காட்டினர், பொருளியல் மாற்றங்களால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றனர். இது ஜூன் மாதத்தின் 87.7 விழுக்காட்டை விடச் சற்றுக் குறைவு.

எனினும், அடுத்த ஆண்டிற்கான ஒட்டுமொத்தப் பணவீக்கம் 3.4 விழுக்காடாக மாற்றமின்றித் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்குமிடம், தனியார் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்த அடிப்படைப் பணவீக்கம் 3.4லிருந்து 3.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பணவீக்க உயர்வுக்குப் புவிசார் பதற்றநிலை முதன்மைக் காரணம் என 59 விழுக்காட்டினர் கூறினர். வணிகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை, விநியோகத் தடைகள் இதர காரணங்களாகும்.

போக்குவரத்துச் செலவுகளுக்கான பணவீக்கக் கணிப்பு 3.8லிருந்து 5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆடை, தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான கணிப்பும் உயர்ந்துள்ளன. உணவு, மருத்துவம், கல்விக்கான கணிப்புகள் மாற்றமின்றி உள்ளன. ஐந்தாண்டு காலப் பணவீக்கக் கணிப்பு 4.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

எதிர்காலத்தில் விலைவாசி உயர்வு குறித்த கவலை குடும்பங்களின் சேமிப்பு, செலவினப் பழக்கங்களைப் பாதிக்கக்கூடும் என்பதால் நீண்டகால அடிப்படைப் பணவீக்க உயர்வைக் கவனிக்க வேண்டும் என்று ஆய்வை வழிநடத்திய எஸ்எம்யு பேராசிரியர் ஹாங் ஷாங் தெரிவித்துள்ளார்.

தங்களின் நிதிநிலை மோசமடையும் என அஞ்சும் குடும்பங்களின் எண்ணிக்கை 46 விழுக்காட்டிலிருந்து 38.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

கொள்கை நம்பகத்தன்மை காரணமாகவே பணவீக்கக் கணிப்பு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தலைமைப் பொருளியல் நிபுணர் தைமூர் பெய்க் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் பணவீக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டாலும், 2026ல் அடிப்படைப் பணவீக்கம் 1.5 முதல் 2 விழுக்காடு வரையிலும், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 2 விழுக்காடாகவும் இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விலைவாசிபணவீக்கம்ஈரான்போர்பதற்றம்பொருளியல்