சிங்கப்பூரில் இந்த ஆண்டு மூடப்பட்ட சில்லறை உணவு, பானக் கடைகளில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட 82 விழுக்காட்டுக் கடைகள் லாபம் ஈட்டவில்லை. அவை, ஐந்தாண்டுக்குள் பதிவுசெய்யப்பட்டவை.
இவ்வாண்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி வரை புதிதாக 3,357 உணவுக் கடைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் 2,431 கடைகள் மூடப்பட்டன. துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 5) அதனைத் தெரிவித்தார்.
மூடப்பட்டவற்றில் 63 விழுக்காட்டுக் கடைகள் ஐந்தாண்டு அல்லது அதற்கும் குறைவான காலத்தில் பதிவுசெய்யப்பட்டவை. அவற்றுள் 82 விழுக்காட்டுக் கடைகள் லாபம் ஈட்டாமல் இருப்பது அவற்றின் வருடாந்தர வரிப் படிவங்களில் தெரியவந்தது.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செஸியாங்கிற்கு அளித்த இரண்டு பதில்களில் துணைப் பிரதமர் கான் அந்தப் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டார்.
மூடப்பட்டவற்றில் 882 கடைகள் அல்லது 36.3 விழுக்காட்டுக் கடைகள் கடந்த மூன்றாண்டுக்குள் பதிவுசெய்யப்பட்டவை. 650 கடைகள் அல்லது 26.7 விழுக்காட்டுக் கடைகள் மூவாண்டுகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவுசெய்யப்பட்டவை.
அந்தத் தரவுகள் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்திடமிருந்து பெறப்பட்டவை.

