அடுத்த மாதம் 1ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருப்பதால் சிங்கப்பூரின் மூன்று பொதுச் சுகாதாரக் குழுமங்களும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சந்திப்பு நேரத்தை மாற்றியமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தகுதிச் சான்றிதழ் பெற்ற மூவரும் அத்தேர்தலில் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தல் நடந்தால் செப்டம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை நாளாக இருக்கும்.
இதனையடுத்து, பலதுறை மருந்தகங்களும் மருத்துவமனைகளின் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களும் 1ஆம் தேதி மூடப்படும். அன்றைய நாள் இடம்பெறவிருக்கும் அறுவை சிகிச்சைகள் இன்னொரு நாளுக்கு மாற்றப்படும்.
அதிபர் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் செப்டம்பர் 1ஆம் தேதியன்று நோயாளிச் சந்திப்பு நேரம் ஒதுக்குவதை நிறுத்திவைத்துள்ளது என்று சிங்ஹெல்த் குழும மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் டெரன்ஸ் சுவா கூறினார்.
“செப்டம்பர் 1ஆம் தேதி நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் சந்திப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள, அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நோயாளிகளின் பட்டியல்களை மருத்துவர்கள் குழுவும் மருத்துவக் குழுக்களும் மறுஆய்வு செய்து வருகின்றன. அவை வேறு நேரத்திற்கு அட்டவணைப்படுத்தப்படும். தேவைப்பட்டால், காலியாகவுள்ள அடுத்த தேதியிலேயே நேரம் ஒதுக்கப்படும்,” என்று பேராசிரியர் சுவா விளக்கினார்.
நோயாளிகளின் புதிய சந்திப்பு நேரமானது, மருத்துவ ரீதியிலான அவசரத்தின், காலத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
பெரும்பாலான பொதுச் சுகாதார நிலையங்களும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
டான் டோக் செங் மருத்துவமனை தலைமையிலான தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், மருத்துவ முன்னுரிமையின் அடிப்படையில் நோயாளிச் சந்திப்பு நேரங்களை மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டது.
புதிய சந்திப்பு நேரங்கள் அடுத்த சில வாரங்களுக்குள் இருக்கும் எனக் கூறப்பட்டது.
“வாய்ப்பிருந்தால், தகுதியுள்ள நோயாளிகளுக்கு தொலைமருத்துவ ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்,” என்று தேசிய பராமரிப்புக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.
இதனிடையே, சந்திப்பு நேரத்தை மாற்றியமைத்து வருவதால் நோயாளிகள் மீண்டும் வரிசை எண் பெறத் தேவையில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மருத்துவச் சந்திப்பு நேரத்தை மாற்றியமைக்க விரும்பும் நோயாளிகள் ‘ஒன்என்யுஎச்எஸ்’ செயலி வழியாக அதனைச் செய்யலாம்.
வழக்கமானதொரு நாளில், அரசாங்கத்தின் 23 பலதுறை மருந்தகங்கள் கிட்டத்தட்ட 22,000 நோயாளிகளுக்குச் சேவையாற்றுகிறது. வெவ்வேறு மருத்துவமனைகளின் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் நாளொன்றுக்கு ஏறத்தாழ 17,500 நோயாளிகளுக்குச் சேவை வழங்குகின்றன.

