பூகிஸ் ஸ்திரீட் பகுதியில் இரண்டாம் தளத்தில் ஒரு காலத்தில் பல ஆடை ஆபரணக் கடைகள் இருந்தன.
குறைந்த விலையில் அவை பொருள்களை விற்று வந்தன. அக்கடைகள் மக்களிடையே பிரபலமாக இருந்தன.
இப்பொழுதோ பூகிஸ் ஸ்திரீட் இரண்டாம் தளத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஏப்ரல் 19ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரில் சென்றபோது அங்கிருந்த 100 கடைகளில் கிட்டத்தட்ட 20 மட்டுமே திறந்திருந்தன. திறந்திருந்த கடைகளில் பெரும்பாலானவை மின்படிகளுக்குச் சற்று தொலைவிலே இருப்பவை.
பூகிஸ் ஸ்திரீட் முதல், மூன்றாம் தளங்களில் வர்த்தகம் எப்போதும்போல் இருந்து வருகிறது. அத்தளங்களில் பெரும்பாலும் உணவு, ஆடை ஆபரண, அழகுப் பராமரிப்புக் கடைகள் உள்ளன.
இரண்டாம் தளத்தில் இருந்த கடைகளுக்கான குத்தகைக்காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி முடிவடைந்ததாக பூகிஸ் ஸ்திரீட் பகுதிக்கான பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்பகுதி, இளையர்களை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் ஒன்றாக மாற்றியமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“அந்த ஒட்டுமொத்தப் பகுதியை சமுதாயம், சமூகங்கள் ஆகியவற்றுக்கு மேலும் பொருத்தமானதாகப் புதுப்பித்துப் புத்துயிரூட்ட எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர் அனுபவங்களுக்கு மெருகூட்டும் அம்சங்களில் கவனம் செலுத்தும், இளையர்களைக் குறிவைக்கும் சில்லறை விற்பனை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மாற்றியமைக்கப்பட்ட பூகிஸ் ஸ்திரீட் இரண்டாம் தளம் அமையும் என்று அவர் சொன்னார். அங்கு தனிப்பட்ட வர்த்தகங்களும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நில அமைப்பு அளிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கான குத்தகை விதிமுறைகளின்படி பூகிஸ் ஸ்திரீட் நிர்வகிக்கப்படுகிறது. நிலையான தொகைக்கான பெருங்குத்தகை (fixed rate master lease) எனப்படும் அந்தக் குத்தகை முறை, மூவாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“அந்நடவடிக்கை அண்மையில் நிறைவடைந்தது. முதல் தளத்தில் வருகையாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கடைகள் பிரபலமாக இருப்பது ஆகிய அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது அங்கே நிறைய கடைகள் தொடர்ந்து செயல்பாடுகின்றன. அதேவேளை, இரண்டாம் தளத்தில் உள்ள கடைகளின் அம்சங்கள், முதல் தளத்தில் இருப்பவற்றிலிருந்து மாறுபடுகின்றன,” என்று பூகிஸ் ஸ்திரீட் பேச்சாளர் குறிப்பிட்டார்.

