முத்திரை வரி தவிர்ப்பு: தாய், மகன்மீது குற்றச்சாட்டு

2 mins read
8a00b8b3-790e-404e-aa63-b46f074d69f2
இங் சியூ யென், 56, என்ற பெண்ணும் டான் கய் வென், 26, என்ற அவருடைய மகனும் ஆளுக்கு ஐந்து குற்றசாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார்ச் சொத்துகளுக்கான ‘99 டு 1’ (99 to 1) வரி தவிர்ப்புத் திட்டம் தொடர்பான தணிக்கையின்போது சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (ஐராஸ்) தவறான தகவல்களை வழங்கியதற்காகத் தாயும் மகனும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

இருநிலை ‘99 டு 1’ சொத்துப் பரிவர்த்தனைகள் தொடர்பான தனது விசாரணையின்போது தவறான தகவல் வழங்கியதற்காக வரி செலுத்துநர் ஒருவர்மீது குற்றம் சுமத்தப்படவிருப்பது இதுவே முதன்முறை என்று ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

இங் சியூ யென், 56, என்ற பெண்ணும் டான் கய் வென், 26, என்ற அவருடைய மகனும் ஆளுக்கு ஐந்து குற்றசாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த 2021 செப்டம்பர் 24ஆம் தேதியன்று டான் தன் பெயரில் ஒரு குடியிருப்புச் சொத்தை வாங்கியது விசாரணையில் தெரியவந்ததாக ஆணையம் தெரிவித்தது. அதன்பின், அச்சொத்தில் ஒரு விழுக்காட்டுப் பங்கைத் தன் தாய் இங்கிடம் அவர் விற்றார்.

2023ஆம் ஆண்டு தான் நடத்திய தணிக்கையின்போது, தொடக்கத்திலேயே தன் தாயுடன் இணைந்து அச்சொத்தை ஏன் வாங்கவில்லை என்று டானிடம் ஆணையம் கேட்டது.

அதற்கு, தன் குடும்பம் தனக்கு நிதியுதவி அளிக்கும் என்றெண்ணி, அச்சொத்தை அவசரப்பட்டு தான் வாங்கிவிட்டதாக டான் பொய்யுரைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தன் குடும்பத்தினரால் தனக்கு நிதியாதரவு அளிக்க முடியாமல் போனதால், கடன் பெற வேண்டி தன் தாயையும் அச்சொத்தின் உரிமையாளராகச் சேர்த்துக்கொண்டதாக அவர் கூறினார்.

மேலும், முடிவுறா வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் தவறான தகவல்களையும் வேறு வகையிலும் பொய்யான பதில்களையும் டான் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இங், டான் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் அவ்விருவருக்கும் $10,000 வரை அபராதம் அல்லது ஈராண்டுவரை சிறை அல்லது அவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குடியிருப்புச் சொத்தை வாங்கும்போது செலுத்த வேண்டிய வீடு வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரியை (ஏபிஎஸ்டி) உரிமையுள்ள வழியில் குறைப்பதற்கு ‘99 டு 1’ என்ற வரி தவிர்ப்பு ஏற்பாட்டை சொத்து வாங்கும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்