மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவனம் (‘பிசிஎஃப்’) நடத்தும் ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர் பள்ளிகள் அனைத்திலும் 2027ஆம் ஆண்டு முதல் சீனம், மலாய், தமிழ் என மூன்று தாய்மொழிகளையும் கற்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 350 ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ நிலையங்களில் தமிழ் மொழி கற்கும் வாய்ப்பு விரிவுபடுத்தப்படுகிறது.
இத்தகவலைத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் சனிக்கிழமை (செப்டம்பர் 12) ஒன் பொங்கோலில் நடைபெற்ற ‘இயற்கையைப் பேணுவோம், மொழியை வளர்ப்போம் – இருமொழிக் கல்வி, சுற்றுச்சூழல்’ விழாவில் அறிவித்தார்.
“ஒவ்வொரு குழந்தையும் அவரவர் குடும்பங்களின் எதிர்காலம் மட்டுமல்லர், நாட்டின் எதிர்காலமும்கூட. அவர்களின் வளர்ச்சியில் தாய்மொழி மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இதைப் புரிந்துகொண்டு, அவர்களின் இருமொழிக் கல்விக்கு ஆதரவளிக்க முற்படுகிறோம். ‘ஸ்பார்க்கல்டோட்ஸ்’ பாலர் பள்ளிகளில் தாய்மொழிகளை விரிவாக்கும் இத்திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 40,000 குழந்தைகள் பயன்பெறுவார்கள்,” என்றார் துணைப் பிரதமர் கான் கிம் யோங் .
குடும்பங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அவ்விழாவில் தாய்மொழிக் கற்றல், சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை கதை சொல்லல், நாடகம் போன்ற நடவடிக்கைகள் வழியாக இணைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணையமைச்சரும் ‘பிசிஎஃப்’ன் நிர்வாகக் குழுத் தலைவருமான ஜனில் புதுச்சேரியும் கலந்துகொண்டார்.
தற்போது ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்’ன் நிலையங்கள் அனைத்திலும் சீன மொழியைக் கற்கும் வசதி உள்ளது என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார். மழலையர் வகுப்பு இரண்டு முதல் பாலர் வகுப்பு இரண்டு வரையிலான வகுப்புகளில் 94 விழுக்காட்டு நிலையங்களில் மலாய் மொழியும், 80 விழுக்காட்டு நிலையங்களில் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுகின்றன.
அனைத்து நிலையங்களிலும் இந்த மூன்று தாய்மொழிகளையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், தொடக்கப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே குழந்தைகள் தங்கள் தாய்மொழியைக் கேட்டு, பேசி, பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
“குழந்தைகள் தங்கள் குடும்பம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள தாய்மொழி உதவுகிறது. இது அவர்களின் அடையாள உணர்வையும் வலுப்படுத்துகிறது,” என்றார் பிசிஎஃப் பாலர் பள்ளியில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி மரினி காமிஸ்.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துக் குழந்தைகள் கற்றுக்கொண்டதோடு, தாய்மொழிகளில் கேட்டும் பேசியும் கலந்துரையாடியும் மகிழ்ந்தனர். விழாவில் தமிழாசிரியர் அபிராமி கருப்பையா, 38, குழந்தைகளுக்காகக் கதை சொல்லும் நிகழ்ச்சியை நடத்தினார். அவர் 2019ஆம் ஆண்டிலிருந்து மழலையர், பாலர் வகுப்புக் குழந்தைகளுக்கு தமிழ் கற்பித்து வருகிறார்.
“தேசிய அடையாளத்திலும் இருமொழித் திறன் முக்கிய இடம் வகிக்கிறது. சிறு வயதிலேயே தாய்மொழித் திறனை வளர்ப்பதன் மூலம், குழந்தைகள் தங்கள் குடும்பம், சமூகங்கள், கலாசாரம் ஆகியவற்றுடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். என் மாணவர்களுக்குத் தமிழ் மொழியை மட்டும் கற்றுக்கொடுக்காமல், தமிழ்க் கலாசாரத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். பாடல்கள், நாட்டுப்புறக் கலைகள், இசைக்கருவிகள் போன்றவற்றை எனது பாடங்களில் இணைத்துக்கொண்டு, தமிழைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறேன்,” என்றார் அபிராமி.
“சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் நம் மொழியைப் பற்றிக் கற்றுக்கொள்வது இன்றியமையாதது. தமிழில் தனித்துவமான வழியில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். மொழி நாம் பேசும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் மாற்றியமைக்கும் தன்மை உடையது. தமிழின் மீதான என் பற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்று அபிராமி கூறினார்.
பிசிஎஃப் பாலர் பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் தாய்மொழிகள் மீதான பற்றை வளர்த்துக்கொள்வதற்கான கூடுதல் வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும் என்று நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

