ஆறு வயது மகனுக்குச் சொந்தமான இரண்டு மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்தை விற்பதற்காக தாய் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
தனது மகனின் அறக்கட்டளை பெயரில் அவர் சொத்தை வாங்கியிருந்தார். அந்தச் சொத்தின் மதிப்பு அண்மையில் 500,000 வெள்ளி அதிகரித்ததைத் தொடர்ந்து அதனை விற்க அவர் முயற்சி செய்தார்.
ஆனால், குழந்தையின் நலனுக்காகத்தான் சொத்து விற்கப்படுகிறது என்பதை நிரூபிக்கத் தவறியதால் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
குழந்தைகளின் அறக்கட்டளை பெயரில் சொத்துகளை வாங்குவது வாங்குபவர்களுக்கான கூடுதல் முத்திரை வரியைச் செலுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வழக்கு ஒரு நல்ல பாடமாகும்.
குழந்தைகளின் அறக்கட்டளை பெயரில் சொத்துகளை வாங்கினால் அது அவர்களுக்குச் சொந்தமாகும். குழந்தைகள் சிறிய வயதில் இருந்தால் அவர்களை சொத்துகளை விற்க நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
இவ்வேளையில், சொத்துகளுக்கான கூடுதல் முத்திரை வரியைத் தவிர்க்க அறக்கட்டளை பெயரில் போலியாக சொத்துகளை வாங்கினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஒரே ஆண்டில் தங்கள் குழந்தைகளின் அறக்கட்டளை சொத்துக்களை விற்பதற்கான பெற்றோரின் விண்ணப்பங்களை இரண்டாவது முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் கையாண்டுள்ளார்.
இதற்கு முந்தைய 2024 நவம்பர் மாத வழக்கில் இரண்டு மகன்களின் அறக்கட்டளை பெயரில் வாங்கிய 2.4 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இரண்டு சொத்துகளை விற்க ஒருவர் அனுமதி கேட்டிருந்தார்.
அந்த வழக்கில் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வதிலும், இரண்டு சொத்துகளின் அடைமானக் கடன்களைச் செலுத்துவதிலும் சொந்த வீட்டை பராமரிப்பதிலும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டதால் வேலையில் இல்லாத அவரது கோரிக்கைக்கு நீதிபதி சூ அனுமதி அளித்தார்.
ஆனால், விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தை குழந்தைகளுக்கான வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் நிதியை அவர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தீர்ப்பு அளித்திருந்தார்.

