தகுந்த உரிமமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) கிராஞ்சி விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு அந்த 22 வயது ஆடவரிடம் காலை 11.30 மணிக்குப் போக்குவரத்துக் காவல்துறையினர் சைகை காண்பித்தனர். ஆனால், அந்த மோட்டார் சைக்கிளோட்டி நிறுத்தாமல் விரைந்து ஓட்டிச் சென்றார்.
பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர் கிராஞ்சி விரைவுச்சாலையிலிருந்து புக்கிட் பாஞ்சாங் ரோட்டை நோக்கிய புக்கிட் தீமா விரைவுச்சாலைக்குச் செல்லும் சாலையில் குதித்துக் கால்நடையாகத் தப்பியோடினார்.
டெய்ரி ஃபார்ம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டார். தகுந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்புறுதி இல்லாதது, அபாயகரமான முறையில் ஓட்டியது, சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரி நிறுத்துமாறு உத்தரவிட்டதற்கு இணங்காமல் நடந்துகொண்டது ஆகியவற்றுக்காக அவர் கைது செய்யப்பாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
தப்பியோடிய பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை குறிப்பிட்டது. விசாரணை தொடர்வதாகவும் காவல்துறை கூறியது.

