ஜூரோங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 1) நிகழ்ந்த கார் - மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கிய 62 வயது மோட்டார்சைக்கிளோட்டி மாண்டுவிட்டார்.
விபத்துக்குப் பிறகு அந்த மோட்டார்சைக்கிளோட்டி நினைவிழந்த நிலையில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 2) தெரிவிக்கப்பட்டது.
ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 - ஜூரோங் டவுன் ஹால் சாலைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணியளவில் அவ்விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 136 பேர் சாலை விபத்துகளுக்குப் பலியாயினர். அந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவானதைவிட 25.9 விழுக்காடு அதிகமாகும். அதோடு, 2016க்குப் பிறகு சென்ற ஆண்டுதான் இத்தனை பேர் சாலை விபத்துகளில் மாண்டனர்.
போக்குவரத்துக் காவல்துறை, ஆண்டுதோறும் வெளியிடும் புள்ளி விவர அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.