விரைவுச்சாலையில் டவர் டிரான்சிட் பேருந்துடன் மோதி மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
cc975eaa-d02c-4b69-8338-80051e4ee051
மோட்டார்சைக்கிளோட்டிக்கு 52 வயது என்று கூறப்படுகிறது. - படங்கள்: இணையம்

மோட்டார்சைக்கிள் ஒன்றும் டவர் டிரான்சிட் பேருந்து ஒன்றும் தீவு விரைவுச்சாலையில் நவம்பர் 27ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் 52 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

விரைவுச்சாலையில் தோ பாயோவுக்கு வெளியேறும் சாலைப் பகுதிக்கு அருகே, காலை சுமார் 10.30 மணிக்கு நடந்த இவ்விபத்து தங்களுக்கு ஆழ்ந்த கவலை அளித்திருப்பதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் டவர் டிரான்சிட் சிங்கப்பூர் தெரிவித்தது.

அந்தப் பதிவின்படி, 27 வயதுடைய பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. காவல்துறை மேற்கொண்டுள்ள விசாரணையில் தாங்கள் உதவி வருவதாகவும் டவர் டிரான்சிட் தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்த இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ உதவியாளர் உறுதிசெய்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

சேவை எண் 966 பாதையில் 30 பயணிகளுடன் சென்ற பேருந்து, விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்த டவர் டிரான்சிட், அப்பயணிகள் எவருக்கும் காயமில்லை என்றது.

விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து பயணிகள் அனைவரும் தங்களின் பயணத்தைத் தொடர வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்