ஆயர் ராஜா விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (டிசம்பர் 29) பிற்பகல் நடந்த விபத்தில் 61 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் குறிப்பிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் கிளமென்டி அவென்யூ 2லிருந்து வெளியேறும் சாலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
விபத்தில் தொடர்புடைய இரு கனரக வாகனங்களில் ஒன்றைத் தேடிவருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது. திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விசாரணை தொடர்கிறது. சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2025) முற்பாதியில், மரணம் விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 78 என்றும் அவற்றில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 என்றும் கூறப்பட்டது.
ஒப்புநோக்க, சென்ற ஆண்டு அத்தகைய 70 விபத்துகளில் 72 பேர் மாண்டனர். போக்குவரத்துக் காவல்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முற்பாதியில் 9.5 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

