தீவு விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
30675f4f-6c01-4e72-8019-68fc5c200d07
சம்பவத்துக்குப் பிறகு இடம்பெற்ற நிகழ்வுகள் பதிவான காணொளியில் உள்ள காட்சி. - காணொளிப் படம்: டேனியல் லீ / ஃபேஸ்புக்

தீவு விரைவுச்சாலையில் (PIE) தனது மோட்டார் சைக்கிள் சறுக்கியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநரான 43 வயது ஆடவர் உயிரிழந்தார்.

அச்சம்பவம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) நிகழ்ந்தது.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிய தீவு விரைவுச்சாலைப் பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. விபத்து நேர்ந்த பிறகு சம்பவ இடத்தில் காணப்பட்ட காட்சிகள் பதிவான காணொளி ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. விரைவுச்சாலையின் இடது தடம் மூடப்பட்டிருந்ததும் சம்பவ இடத்தில் மருத்துவ உதவி வாகனம் (ambulance) இருந்ததும் அந்தக் காணொளியில் தெரிந்தன.

மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார். சாலையைப் பயன்படுத்துவோரில் மோட்டார் சைக்கிளோட்டிகள்தான் ஆக அதிக அபாயத்தை எதிர்நோக்குபவர்கள்.

இவ்வாண்டு முற்பாதியில் நிகழ்ந்த 54.5 விழுக்காட்டு சாலை விபத்துகள் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றோரும் தொடர்புடையவை. சாலை விபத்துகளுக்குப் பலியானோரில் 61.6 விழுக்காட்டினர் அத்தகையோர் ஆவர்.

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் விபத்துகளில் பலியான மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்