விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
dd40eb69-2133-48a3-b534-3d8725529a14
விபத்துக்குப் பிந்திய நிகழ்வுகள் பதிவான காணாளியில் இடம்பெற்ற காட்சிகள். - காணொளிப் படங்கள்: MEMORABLEOSTRICH4283 / ஃபேஸ்புக்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதிகாலை நிகழ்ந்த விபத்தில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி மாண்டுவிட்டார்.

விரைவுச்சாலையின் லோவர் டெல்டா ரோட் நுழைவாயிலுக்கு முன்னால் லாரியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்கு உள்ளானதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது. 31 வயது ஆண் மோட்டார் சைக்கிளோட்டி நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

38 வயது லாரி ஓட்டுநர் விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகக் காவல்துறை கூறியது.

இவ்விபத்துக்குப் பிந்திய காட்சிகள் பதிவான காணொளி Malaysia-Singapore Border Crossers எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறைந்தது நான்கு காவல்துறை கார்கள், ஒரு குற்றச் சம்பவ விசாரணை வாகனம் ஆகியவை சம்பவ இடத்தில் இருந்தது அந்தக் காணொளியில் தெரிந்தது. விரைவுச்சாலையின் நடுத் தடத்தில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததும் தெரிந்தது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மரினா கடற்கரை விரைவுச்சாலையை (MCE) நோக்கிய பகுதியில் லோவர் டெல்டா ரோட்டுக்கு அப்பால் விபத்து நிகழ்ந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் அதிகாலை 4.14 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துமரணம்உயிரிழப்புலாரி