நவம்பர் 1 முதல், மோட்டார் சைக்கிளோட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட பலவகை தலைக்கவசங்களைப் பயன்படுத்தலாம். மேலும், தரநிர்ணயத்திலும் மாற்றத்தை எதிர்நோக்கலாம்.
ஐரோப்பிய ஒழுங்குமுறை எண் 22ன் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளியல் ஆணைக்குழு தரநிலையைப் பூர்த்தி செய்யும் அங்கீகரிக்கப்பட்ட தலைக்கவசங்களின் பட்டியலை அதிகாரிகள் விரைவில் வெளியிடுவர்.
புதிய சிங்கப்பூர் தரத்தின்கீழ் புதிய தலைக்கவசங்கள் அறிமுகம் காணும். அவை, தற்போது இங்கு விற்கப்படும் தலைக்கவசங்களின் தோற்றத்தை மாற்றும்.
ஐநா தரங்களைப் பூர்த்தி செய்யும் தலைக்கவசங்களை எந்தவொரு ஒப்புதல் செயல்முறைகளுக்கும் உட்படுத்தாமல் இங்கு விற்கலாம் என்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) வெளியிட்ட ஓர் அறிக்கையில் போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.
“இது சந்தையில் பல்வேறு வகையான அங்கீகரிக்கப்பட்ட தலைக்கவசங்கள் விற்கப்படுவதற்கு வழிவகுக்கும், மேலும் தலைக்கவசங்களின் விலையும் குறையும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஐநா தரநிலை என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது, இது ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
சுழற்சி தாக்க பாதுகாப்பு, பார்வைத் தேவைகளுக்கான மேம்படுத்தப்பட்ட அம்சம், அதிவேக தாக்கத்தைத் தாங்கும் அம்சம் ஆகியவை இதில் அடங்கும். இவை மோட்டார் சைக்கிள் விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கியமான அம்சமாக விளங்குவதாகப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.