வாகனமோட்டிகள் தங்களது வாகனத்தில் மின்னியல் சாலைக் கட்டணமுறைக்கான ஓபியூ (OBU) கருவியைப் பொருத்தியிருந்ததால் அவர்களுக்குத் திடீர் வெள்ளம் குறித்த அறிவிப்புகள் கிடைக்கும்.
மழை அதிகமாக இருக்கும் நேரங்களில் சில சாலைகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம். அப்போது அந்தச் சாலைகளை நோக்கிச் செல்லும் வாகனமோட்டிகளுக்குத் திடீர் வெள்ளம் குறித்த அறிவிப்புகள் கிடைக்கும்.
“வாகனமோட்டிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இதனால் திடீர் வெள்ளம் உள்ள சாலைகளை வாகனமோட்டிகள் தவிர்க்கலாம்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
தற்போது ஓபியூ கருவிமூலம், சில முக்கியமான வாகன நிறுத்தும் இடங்களில் எத்தனை இடங்கள் உள்ளன, வேகத்தைக் கண்காணிக்கும் படக்கருவிகள், நடப்பில் உள்ள பேருந்துத் தடம் உள்ளிட்டவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
இந்தப் புதிய வசதியை வாகனமோட்டிகள் வரவேற்றுள்ளனர். முக்கியமான நேரங்களில் ஓபியூ கருவிகளில் மூலம் கிடைக்கும் அறிவிப்புகள் பல நன்மைகளைத் தரும் என்று கருத்து தெரிவித்தனர்.
இம்மாதம் ஜூன் மாத தரவுகள்படி சிங்கப்பூரில் 500,000க்கும் அதிகமான வாகனங்களில் ஓபியூ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் ஓபியூ கருவிகளைப் பொறுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.