கேலாங் சிராயில் ரமலான் சந்தை தொடங்கிவிட்டது. பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கிய சந்தை மார்ச் 31 வரை களைகட்டும்.
இக்காலகட்டத்தில் அப்பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாங்கி ரோடு, சிம்ஸ் அவென்யூ ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிடப்பட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சாலைகளைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் கவனமாக வாகனம் ஓட்டுமாறும் வாகன ஓட்டிகளைக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுமக்களுக்கு உதவவும் நெரிசலான சாலைகளிலும் சந்திப்புகளிலும் துணைக் காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.
சட்டவிரோதமாக வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியது.
பண்டிகை காலகட்டத்தில் இணையம் வழி பொருள்கள் வாங்கும்போது அல்லது வாகனங்களை வாடகைக்கு எடுக்கும்போது மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போலியான கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் மோசடிக்காரர்கள் குறிவைப்பார்கள். பணத்தைப் பெற்றதும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று காவல்துறை எச்சரித்தது.
உறுதிசெய்யப்படாத அமைப்பு, நிறுவனங்களின் மென்பொருள், செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது, தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கிக் கணக்குப் பயன்பாட்டு எண்கள் போன்ற விவரங்கள் ரகசியமாக இருப்பதை உறுதிசெய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மோசடி எனச் சந்தேகப்பட்டால் நண்பர்கள், குடும்பத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். உணர்ச்சி[Ϟ]வசப்பட்டு செயல்படக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பூத்திரிகளை தவறாகப் பயன்படுத்துவது, அதாவது பல தீப்பொறிகளை ஒன்றாக இணைத்து ஒரே நேரத்தில் கொளுத்துவது குறித்தும் காவல்துறை எச்சரித்துள்ளது. அக்குற்றத்துக்கு ஓராண்டு வரை சிறை அல்லது $5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பூத்திரிகளால் மற்றவரை காயப்படுத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பண்டிகைக் காலத்தில் கேலாங் சிராய் வட்டாரத்தில் பெரும் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், கடைக்காரர்களும், பொது மக்களும் விழிப்புடன் இருந்து தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறது.
கேலாங் சிராய் ரமலான் சந்தையில் உணவுகள், பல்வேறு பொருள்களை விற்கும் கிட்டத்தட்ட 500 கடைகள் உள்ளன.
சந்தையில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை அங்கங்கள் உள்ளிட்ட நேரடி நிகழ்ச்சிகளும் அன்றாடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

