தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவழி எல்லைகளில் வரிசையை முந்திச் செல்வோர் தடை செய்யப்படலாம்

2 mins read
4958b91b-8c81-4b05-82b4-98433a692944
காஸ்வே கடற்பாலத்தில் அண்மையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். - கோப்புப் படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் சில வாகன ஓட்டிகள் நேரத்தை மிச்சப்படுத்த வரிசையை முந்திச்செல்லக்கூடும். அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை காத்திருக்கிறது.

வரிசையை முந்திச்செல்லும் ஓட்டுநர்களைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் நிறுத்தக்கூடும். யு-டர்ன் (u-turn) செய்து மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ளுமாறு அதிகாரிகள், அந்த ஓட்டுநர்களுக்கு உத்தரவிடக்கூடும்.

சில ஓட்டுநர்கள் தவறு இழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்படலாம் (blacklisted), அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இவ்வாண்டின் ஜுன் பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் நிலவழி எல்லைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் சுமுகமாக இருக்கப் போக்குவரத்து ஒழுங்குமுறையைப் பின்பற்றுமாறு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய உச்சநேரங்களில் ஓட்டுநர்கள் வரிசையை முந்திச்செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பதாக உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாட்டு நிலையத்தின் குழுத் தலைவரான இன்ஸ்பெக்டர் மர்டியானா மஸ்டார், 43, தெரிவித்தார். அவர், செய்தியாளர்களுக்கு மெய்நிகரில் நேர்காணல் அளித்தார்.

வரிசையை முந்திச்செல்லும் ஓட்டுநர்களைக் கண்டால் அதிகாரிகள், செயல்பாட்டு நிலையக் குழுவிடம் தெரியப்படுத்துவர். பிறகு சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களை யு-டர்ன் செய்து மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ள உத்தரவிடுமாறு சோதனைச்சாவடிக்கு அருகே உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கூறப்படும்.

அதற்கு இணங்காத ஓட்டுநர்களுக்கு நிலவழி சோதனைச்சாவடிகளைக் கடக்கத் தடை விதிக்கப்படலாம்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த மலேசிய ஓட்டுநர் ஒருவர் வரிசையை முந்திச்சென்றது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அவர் மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ள மறுத்தது மட்டுமின்றி அங்கிருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுவிட்டார்.

அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்காததற்காகவும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் அந்த ஓட்டுநருக்கும் அவரின் காருக்கும் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டது.

ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்தில் இரண்டு நிலவழி எல்லைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இம்மாதம் 23ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்தது. குறிப்பாக ஜூன் 6 முதல் 9 வரை நீடிக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வார இறுதி காலத்துக்கு இது பொருந்தும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்