மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி மூடப்படுகிறது

2 mins read
487c0c84-6cc0-4a74-bf93-43a8bdfab7a4
மாறிவரும் வேலைச் சந்தைக்கு ஏற்ப சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது கூடுதல் சவாலாகிவிட்டதாக மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி கூறியது. - படம்: சிஎன்ஏ

சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி இவ்வாண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் அங்கு பயின்றனர்.

புதிய கல்வி நிலையத்தை நிறுவ முன்வைக்கப்பட்ட திட்டங்களும் கைகூடவில்லை. புதிய கல்வி நிலையத்துக்காக அரசாங்க உதவியுடன் புதிய நிலப்பகுதி பெறப்பட்டபோதும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி மூடப்படுவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் பெற்றோருக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கான வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட வாழ்வாதார வாய்ப்புகள் குறித்து சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் பேசிய பெற்றோர் சிலர் கவலை தெரிவித்தனர்.

மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

வேலை வாய்ப்புகளைப் பெறவும் யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக வாழவும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு அப்பள்ளி திறன்களைக் கற்பித்தது. அதற்குத் தேவையான தன்னம்பிக்கையையும் அது ஊட்டியது.

இதற்கிடையே, பள்ளி மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான கல்வியும் பயிற்சியின் கடந்த சில ஆண்டுகளாகப் பேரளவில் மாற்றம் அடைந்துள்ளதாகக் கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் செவித்திறனற்றோர் சங்கம் ஆகியவற்றுடன் மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி கூட்டு அறிக்கையில் தெரிவித்தது.

மாறிவரும் வேலைச் சந்தைக்கு ஏற்ப சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது கூடுதல் சவாலாகிவிட்டதாக மவுண்ட்பேட்டன் தொழில்சார்ந்த பள்ளி கூறியது.

பள்ளியில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில் குறைந்திருப்பதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்