பொதுமக்களின் பங்களிப்புக்குக் குரல் கொடுக்கும் எம்பி ஃபூ செஸியாங்

பொதுமக்களின் பங்களிப்புக்குக் குரல் கொடுக்கும் எம்பி ஃபூ செஸியாங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Nov 2026 - 4:13 pm

2 mins read

சிங்கப்பூரர்கள், கொள்கை சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த கல்வியே முதல் படி என்று மனிதவள துணையமைச்சர் ஃபூ செஸியாங் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் முதல் தவணைக் கால நாடாளுமன்ற உறுப்பினரான திரு ஃபூ, அரசியல் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், குடிமக்களின் பங்களிப்பில் நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.

“அதிக வாய்ப்புகளை வழங்க முதலில் அதுபற்றி கற்பிக்க வேண்டும். அடிப்படையான விவகாரங்களையும் அவற்றின் பின்னணி, தகவல்களையும் பகிர்ந்துகொள்ளாவிட்டால் ஆக்கபூர்வமான ஒன்றை எதிர்பார்க்க முடியாது,” என்று 41 வயது திரு ஃபூ விளக்கம் அளித்தார்.

எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை ஆகியவற்றின் துணையமைச்சருமான திரு ஃபூ, முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம், பல்கலைக்கழக நாள்களில் நகரத் திட்டமிடல் குறித்து பயின்ற காலத்திலிருந்தே தொடங்கியது என்றும் சமூகத் திட்டமிடலில் அதிக ஆர்வம் இருந்தது என்றும் சொன்னார்.

அரசாங்க ஊழியராகப் பணியாற்றியபோது அந்த எண்ணம் தமக்குள் வேறூன்றியதைக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும்போது அந்தச் சேவை இன்னும் கூடுதலான பலனைத் தர முடியும் என்பதை உணர்ந்ததாகக் கருத்துரைத்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தஞ்சோங் பகார் - தியோங் பாரு தொகுதியில் அத்தகைய பாணியிலான பல முன்னோடித் திட்டங்களை ஃபூ மேற்பார்வையிட்டுள்ளார்.

தியோங் பாருவில் மேற்கொள்ளப்பட்ட மறுசுழற்சி சோதனைத் திட்டம், ஸ்பாட்டிஸ்வுட் பார்க் குடியிருப்புப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

பல வாரயிறுதிகளில் இடம்பெற்ற அந்த இரண்டு திட்டங்களும் பல்வேறு அரசாங்க அமைப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் கலந்துரையாடல்களில் ஒன்றிணைத்தன.

மக்களை அத்தகைய வகையில் ஈடுபடுத்தும்படி நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் திரு ஃபூ குரல் கொடுத்தார்.

‘செயல்களாலான ஜனநாயகத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பிலான அவரது உரை, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துடிப்புமிக்க குடிமக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையை ஆதரித்தது.

அக்டோபர் 26ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில், அரசாங்கம் சமூகங்களையும் சுற்றுப்புறங்களையும் வடிவமைக்கும்போது திட்டமிடல் அணுகுமுறையின் மையப் புள்ளியாகக் குடிமக்களின் ஈடுபாட்டை வைக்க வேண்டும் என்று ஃபூ வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்