தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எண்ணெய்க் கசிவு குறித்து தகவல் கிடைத்த 11 நிமிடங்களுக்குள் துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை’

2 mins read
துப்புரவுப் பணிகளை முடிக்க நேரம் எடுக்கும்: போக்குவரத்து அமைச்சர்
221edc84-2db9-4aa3-9699-09453715d7f4
மரினா சவுத் பியரில் எண்ணெய்ப் படலங்களை அப்புறப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஈடுபட்ட படகு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பல் மீது தூர்வார் படகு ஒன்று மோதியதில் பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்து 11 நிமிடங்களுக்குள் சிங்கப்பூரின் துறைமுக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

நெதர்லாந்துக் கொடி தாங்கிய ‘வோக்ஸ் மாக்ஸிமா’ படகு, சிங்கப்பூர்க் கொடி தாங்கிய ‘பங்கர்’ கப்பலான ‘மரின் ஹானர்’ மீது மோதிய சம்பவம் குறித்து கடல்துறை, துறைமுக ஆணையத்துக்கு ஜூன் 14ஆம் தேதி பிற்பகல் 2.22 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜூ 18) தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

நான்கு நிமிடங்களுக்கு முன்னர், பிறபகல் 2.18 மணிக்கு ‘வோக்ஸ் மாக்ஸிமா’ படகு, இயந்திரம் மற்றும் திசைதிருப்பியின் கட்டுப்பாட்டைத் திடீரென இழந்ததைத் தொடர்ந்து அது ‘மரின் ஹானர்’ கப்பல் மீது மோதியது. இதனால் அக்கப்பலின் எண்ணெய்த் தொட்டிகளில் ஒன்றுக்கு சிதைவு ஏற்பட்டது.

பிற்பகல் 2.33 மணிக்குள் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்த ஆணைய அதிகாரிகள், அக்கப்பலில் இருந்து மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படாததை உறுதிசெய்ததாக திரு சீ தெரிவித்தார். அப்போது அக்கப்பலின் தொட்டியில் இன்னும் 400 மெட்ரிக் டன் எண்ணெய் இருந்தது. எஞ்சிய பாதியளவு எண்ணெய், சம்பவம் நிகழ்ந்த உடனே கடலில் கசிந்துவிட்டது.

சம்பவம் நிகழ்ந்தபோது ‘வோக்ஸ் மாக்ஸிமா’ படகு, துறைமுகத்துக்குள் நுழையும் அல்லது துறைமுகத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

வெளிநாட்டு கொடிதாங்கிய கப்பல்கள் பொதுவாக துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கப்பல்களை வழிநடத்த, தகுதிவாய்ந்த உள்ளூர் துறைமுக மாலுமிகளைப் பணியில் ஈடுபடுத்துகின்றன.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, துறைமுக நடத்துனரான பிஎஸ்ஏவைச் சேர்ந்த துறைமுக மாலுமிகள், வெளிநாட்டுக் கொடிதாங்கிய கப்பல்களின் மாலுமிகளுக்கு வழிகாட்டும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

ஆணையம் எண்ணெய்க் கசிவை படிப்படியாக சுத்தம் செய்து விசாரணைகளை முழுமையாக முடிக்க நேரம் எடுக்கும் என்று திரு சீ கூறினார்.

“இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் புரிதலை நாங்கள் நாடுகிறோம்,. “தூய்மைப்படுத்தும் பணிகளை விரைவில் முடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்றார் அவர்.

இந்நிலையில், பொதுமக்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சீ, சிங்கப்பூர் துறைமுக நீரிலும் நங்கூரங்களிலும் ஏற்பட்ட நெரிசலால் இந்தச் சம்பவம் நிகழவில்லை என்றார்.

“சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள், தொழில்துறைப் பங்காளிகள், தொண்டூழியர்கள், அண்டை நாடுகளின் கடல்துறை, துறைமுக அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்