தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூரிலும் பரவலாம் என அமைச்சர் எச்சரிக்கை

ஆப்பிரிக்காவில் குரங்கம்மைத் தொற்று நிலைமை கவலையளிக்கிறது: அமைச்சர் ஓங்

4 mins read
8f0ed95a-d799-4d58-bd91-6d011f39c2ef
பல ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவும் இந்தக் கிருமி மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இபிஏ

ஆப்பிரிக்காவிலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்டுள்ள குரங்கம்மைப் (mpox) பரவல் “மிகவும் கவலைக்குரியதாக” உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விமானச் சேவைகள் இல்லாததால் ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் தற்போது ஆபத்து குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் நோய்க்கிருமி இங்கும் வரக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பல ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவும் நோய்க்கிருமி, மத்திய கிழக்கு, ஐரோப்பா வரை பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுவாக, இது மிகவும் கவலைக்குரிய சூழ்நிலை, குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு. ஆனால், குரங்கம்மை ஆசியாவுக்கு பரவும் என்ற அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். மத்திய கிழக்கு, ஐரோப்பாவிற்கான விமானச் சேவைகள் காரணமாக இப்பகுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்களை அறியும் முதல் இடங்களில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கும்,” என்று திரு ஓங் கூறினார். செம்பவாங், புக்கிட் கான்பெராவில் நடைபெற்ற வாழ்க்கைத்தொழில், திறன் கண்காட்சியில் கலந்துகொண்டு அமைச்சர் ஓங் பேசினார்.

சிங்கப்பூர் இக்கிருமித்தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17)  e2i வாழ்க்கைத் தொழில், திறன் கண்காட்சியில் பங்கேற்றபோது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
சிங்கப்பூர் இக்கிருமித்தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) e2i வாழ்க்கைத் தொழில், திறன் கண்காட்சியில் பங்கேற்றபோது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இது கவலைக்குரியது. சிங்கப்பூர் விழிப்புடன் இருக்க வேண்டும். கிருமி சிங்கப்பூரில் பரவும் என்று எதிர்பார்க்க வேண்டும். தொற்று ஏற்பட்டால், தகுந்த நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

மங்கிபாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை, சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும், சீழ் வழியும் காயங்களையும் உடலில் ஏற்படுத்துகிறது.

உடலுறவு உட்பட சாதாரணமான நெருங்கிய தொடர்பு மூலம் எளிதில் பரவும் திறன் கொண்ட புதிய கொடிய கிருமித் திரிபான ‘கிளேட் I’, அனைத்துலக சுகாதார நிபுணர்களை அச்சமடையச் செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கடந்த ஈராண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மையை அனைத்துலக பொது சுகாதார நெருக்கடிநிலையாக அறிவித்தது.

2023 ஜனவரி முதல் 27,000 பேர் இக்கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் புதிய ‘கிளேட்’ கிருமியின் வேகமான பரவலும் அண்டை நாடுகளின் தொற்றுச் சம்பவங்களும் “மிகவும் கவலையளிப்பதாக” உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியசுஸ் கூறியுள்ளார்.

தற்போதுவரை, சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட அனைத்து தொற்றுகளும் கடுமையில்லாத ‘கிளேட் II’ கிருமியினால் பரவியவை. இது பெரும்பாலும் 2022- 23 தொற்றுப்பரவலின்போது ஏற்பட்டவை.

ஜனவரி 2024 முதல் சிங்கப்பூரில் 12 குரங்கம்மை கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானது. இது ‘கிளேட் II’ கிருமித் திரிபைச் சேர்ந்தது என்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

2022 ஜூன் இறுதியில் இந்நோய்த்தொற்று குறித்த செய்திகள் வரத்தொடங்கியதிலிருந்து அந்த ஆண்டில் 18 தொற்றுச் சம்பவங்களும் 2023ல் 32 தொற்றுச் சம்பவங்களும் இங்கு பதிவாகின.

கிருமித்தொற்று இங்கு பரவினால், எத்தகைய கிருமியைக் கையாள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள சிலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று திரு ஓங் கூறினார்.

முதலாவதாக, நோய்க்கிருமியின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். கிளாட் II மிகவும் குறைந்த இறப்பு விகிதத்தை (0.2%) கொண்டது. அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 1,000 பேருக்கும் இரு இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

கிளேட் I திரிபின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 3.5 முதல் 4 விழுக்காடாக உள்ளது. கிளேட் 1பி திரிபின் இறப்பு விகிதம் 0.7 விழுக்காடாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

உயிரிழப்பு விகிதத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற அவர், கொவிட்-19 கிருமித்தொற்று முதலில் பரவியபோது, அதன் இறப்பு விகிதம் நோய்த் தடுப்பு மருந்துக்கு முன்னர் 4 விழுக்காடாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

“இவை ஆப்பிரிக்காவில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரம். ஆப்ரிக்காவில் பல சுகாதார சவால்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு இக்கிருமித்தொற்று பரவும்பட்சத்தில், நாட்டின் சுகாதார கட்டமைப்பு, நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் திறன் ஆகியவற்றுடன், இறப்பு விகிதத்தைக் கணிசமாக குறைக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டாவதாக, நோய்க்கிருமி யாரைப் பாதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இத்தொற்று குழந்தைகளைப் பாதிப்பதாகத் தெரிகிறது. பெரியம்மைக்கு எதிராக குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படாத ஆப்பிரிக்காவில், “15 வயதுக்குக் குறைவான குழந்தைகள்” கூடுதலாக நோய்க்கிருமி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் திரு ஓங் கூறினார்.

இறுதியாக, நோய்க்கிருமி பரவும் தன்மை, பரவல் முறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிளேட் II திரிபு பெரும்பாலும் அதிக ஆபத்தை விளைவிக்கும் உடலுறவில் ஈடுபடுபவர்களிடையே பரவியது, அதே நேரத்தில் கிளேட் I திரிபு நெருங்கிய தொடர்புகளிடையே பரவுகிறது.

“அதேநேரத்தில், இது கொவிட்-19 போல பரவுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அது காற்றில் பரவும் துகள்கள் மூலம் வெகுதூரம் பரவக்கூடும்,” என்றார் அவர்.

கோமா பகுதியில் கிருமித்தொற்றினால் இவ்வாண்டு ஜூலை மாதம் பாதிக்கப்பட்டவர். இக்கிருமித்தொற்றினால் வலிமிகுந்த சொறி, நிணநீர் கணுக்களில் வீக்கம், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கோமா பகுதியில் கிருமித்தொற்றினால் இவ்வாண்டு ஜூலை மாதம் பாதிக்கப்பட்டவர். இக்கிருமித்தொற்றினால் வலிமிகுந்த சொறி, நிணநீர் கணுக்களில் வீக்கம், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. - படம்: ராய்ட்டஸ்

குரங்கம்மை மற்ற நாடுகளுக்குப் பரவுவதால் நிலைமையை சுகாதார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், சிங்கப்பூரர்களும் நிலைமையை அறிந்து தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஓங் அறிவுறுத்தினார்.

இந்நோய்த்தொற்றுகளை திறம்படக் கண்டறிந்து நிர்வகிக்கும் திறன் சிங்கப்பூர் சுகாதாரக் கட்டமைப்புக்கு உள்ளது என்று சுகாதார அமைச்சு ஆகஸ்ட் 15ஆம் தேதி கூறியது.

கிளேட் I நோய்த்தொற்றாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் உட்பட அனைத்து குரங்கம்மைச் சம்பவங்களையும் கண்டறித்து அறிவிப்பதில் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மருத்துவர்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பரவலைக் குறைக்க, உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இறுதியாக தொடர்பு இருந்த நாளிலிருந்து 21 நாள்கள் வரை கண்காணிக்கப்படுவர்.

குறிப்புச் சொற்கள்