தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 காலத்துக்கு முன்பிருந்ததைவிட அதிகமானோர் எம்ஆர்டி, எல்ஆர்டியில் பயணம்

2 mins read
5cffe1cf-a032-42de-97b1-c93d196739c2
சென்ற ஆண்டு தினமும் சராசரியாக 3.41 மில்லியன் பயணங்கள் எம்ஆர்டியில் மேற்கொள்ளப்பட்டன. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் பெருவிரைவு ரயில், இலகு ரயில் சேவைகளைப் (எம்ஆர்டி, எல்ஆர்டி) பயன்படுத்தியோரின் எண்ணிக்கை முதன்முறையாக, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு இருந்ததைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

சென்ற ஆண்டு எம்ஆர்டி, எல்ஆர்டி சேவைகளைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை, கொவிட்-19 காலத்துக்கு முன்பு பதிவானதைத் தாண்டியது. எனினும், தினமும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் சராசரி எண்ணிக்கை, கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பு பதிவானதைவிட தொடர்ந்து குறைவாக இருந்து வருகிறது.

2024ல் தினமும் சராசரியாக 3.41 மில்லியன் எம்ஆர்டி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டு பதிவானதைவிட 5.2 விழுக்காடு அதிகமாகும். 2019ஆம் ஆண்டில் எண்ணிக்கை 3.28 மில்லியனாகப் பதிவானது.

அதேபோல், சென்ற ஆண்டு தினமும் சராசரியாக 3.84 மில்லியன் பொதுப் பேருந்துப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.இந்த எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் 2.4 விழுக்காடு அதிகம். எனினும், 2019ல் பதிவான 4.1 மில்லியன் பயணங்களைக் காட்டிலும் சென்ற ஆண்டு பதிவானது குறைவாகும்.

ஒட்டுமொத்தமாக, சென்ற ஆண்டு தினமும் சராசரியாக 7.46 மில்லியன் ரயில், பொதுப் பேருந்துப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2019ல் பதிவான 7.69 மில்லியனைவிட மூன்று விழுக்காடு குறைவு.

பொருளியல் நடவடிக்கைகள் அதிகரித்து அதற்கேற்றவாறு தேவை கூடும்போது பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கொவிட்-19 காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலையை அடையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளைப் பயன்படுத்தியோர் புள்ளி விவரங்களையும் நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) வெளியிட்டது.

தனியார் வாடகை கார் சேவைகளை தினமும் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை முதன்முறையாக, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு பதிவானதைத் தாண்டியது. சென்ற ஆண்டு, தினமும் சராசரியாக 431,000 தனியார் வாடகைக் கார் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2019ல் பதிவான 419,000ஐவிட அதிகமாகும்.

அதேநேரம், டாக்சி சேவைகளைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை, கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்ற ஆண்டு தினமும் சராசரியாக 187,000 டாக்சி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது, 2019ஆம் ஆண்டு பதிவானதில் பாதிக்கு சற்று அதிகமாகும்.

ஒட்டுமொத்தமாக சென்ற ஆண்டு தினமும் சராசரியாக 618,000 தனியார் வாடகை கார், டாக்சி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2019ல் இந்த எண்ணிக்கை 772,000ஆகப் பதிவானது.

இதற்கிடையே, சென்ற ஆண்டிறுதியில் சிங்கப்பூரில் 13,117 டாக்சிகள் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2014ல் செயல்பட்ட 18,542ஐவிட 29.3 விழுக்காடு குறைவாகும்.

குறிப்புச் சொற்கள்