பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் எம்ஆர்டி ரயில் சேவை மூன்று முறை தடைப்பட்டது.
இருப்பினும், ரயில் சேவைகளை வழங்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி ஆகிய நிறுவனங்களிடம் முழு அமைப்பு ரீதியான பிரச்சினைகள் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, சேவைத் தடைகள் தொடர்பாக விசாரணைக் குழுவை அரசாங்கம் அமைக்காது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் புதன்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தார்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஐந்து நாள்களுக்கு வடக்கு-தெற்கு ரயில் பாதை, வடக்கு-கிழக்கு ரயில் பாதை, வட்ட ரயில் பாதை ஆகியவற்றில் மூன்று ரயில் சேவைத் தடை சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் திரு சீயின் விளக்கம் அமைந்தது.
முன்பு, கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட மிக மோசமான சேவைத் தடைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தாம் அழைப்பு விடுத்ததை திரு லியோங் சுட்டினார்.
ஆனால், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, ரயில் சேவை மூன்று முறை தடைப்பட்டதால் அதற்காக விசாரணைக் குழு அமைக்கப்படுமா என்று அவர் வினவினார்.
அந்த மூன்று சேவைத் தடைகளுக்கான காரணத்தைக் கண்டறிய நிலப் போக்குவரத்து விசாரணை நடத்துவதாக அமைச்சர் சீ கூறினார்.
அவற்றின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அடையாளம் காண ஆணையம் தன்னால் ஆன அனைத்தையும் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
அதையடுத்து, அவற்றை ரயில் சேவை நடத்துநர்களுடன் ஆணையம் பகிர்ந்துகொள்ளும் என்றார் அமைச்சர் சீ.
இதற்கு முன்பு ஒருமுறை வடக்கு-தெற்கு ரயில் பாதையில் நான்கு நாள்களில் மூன்று சேவைத் தடைகள் ஏற்பட்டன.
அதையடுத்து, 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்.
அச்சேவைத் தடைகளால் 200,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

