தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடரும் எம்ஆர்டி சேவை இடையூறு; கனமழை, குழப்பத்தால் பயணிகளுக்குக் கூடுதல் அசௌகரியம்

3 mins read
88160dd5-bb63-4301-a6bf-b1ca49a095fd
பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பயணிகள் மழையில் நனையாமல் இருக்க, பேருந்து நிறுத்தங்களுக்கு மிக அருகில் நிறுத்த பேருந்து ஓட்டுநர்களுக்கு அவர்கள் சைகை காட்டியதாகவும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அவர்கள் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாறு காரணமாக நேற்றிலிருந்து (செப்டம்பர் 25ஆம் தேதி) எம்ஆர்டி சேவை தடைபட்டுள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை தொடர்ந்து முடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையே இலவசப் பேருந்து, இணைப்புப் பேருந்துச் சேவைகள் விடப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ரயில் சேவை இடையூறு ஒருபுறம் இருக்க, செப்டம்பர் 26ஆம் தேதியன்று காலை 8 மணி அளவில் கனமழை பெய்யத் தொடங்கியது.

இதனால் ரயில் சேவை இடையூறு காரணமாகப் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குக் கூடுதல் அசௌகரியம் ஏற்பட்டது.

பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் மழையில் நனையாமல் இருக்க, பேருந்து நிறுத்தங்களுக்கு மிக அருகில் நிறுத்த பேருந்து ஓட்டுநர்களுக்கு அவர்கள் சைகை காட்டியதாகவும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அவர்கள் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இணைப்புப் பேருந்துச் சேவை தொடர்பாகப் பயணிகள் இடையே குழப்பம் நிலவியது.

குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படுவதாகப் பயணிகள் பலர் தவறாகப் புரிந்துகொண்டதாக அறியப்படுகிறது.

புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்துக்கு ரயிலில் சென்று அங்கிருந்து வழங்கப்படும் இணைப்புப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

குவீன்ஸ்டவுன் நிலையத்துக்கு வரும் ரயிலில் ஏறலாமா என்ற குழப்பமும் பயணிகள் பலருக்கு ஏற்பட்டது.

நிலைய ஊழியர்களிடம் உறுதிப்படுத்திய பிறகே அவர்கள் ரயிலில் ஏறினர்.

எம்ஆர்டி நிலைய தளமேடையில் காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டனர்.

புதிய, தற்காலிக ஏற்பாடுகள் குறித்து குழப்பமடைந்த பயணிகளில் தாதியரான 35 வயது திருவாட்டி அஸ்வதி பிரசாத்தும் ஒருவர்.

“எனக்குக் குழப்பமாக உள்ளது. இதைப் பற்றி யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை,” என்றார் அவர்.

புதிய ஏற்பாடுகள் குறித்து ரயிலில் அறிவிக்கப்படவில்லை என்றும் பூன் லே எம்ஆர்டி நிலைய ஊழியர்கள் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறைகூறினார்.

தானா மேரா வட்டாரத்தில் பணிபுரியும் திருவாட்டி அஸ்வதி, காலை 7 மணிக்குள் வேலையிடத்தில் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த சேவை இடையூறு, குழப்பங்கள் காரணமாக வேலைக்குத் தாமதாகச் செல்ல நேரிடும் என அவர் கவலை தெரிவித்தார்.

மிகவும் அசௌகரியமாக இருப்பதாக அவர் கூறினார்.

அதோடு, அந்நேரத்தில் கிராப் காரின் கட்டணம் உயர்ந்திருந்ததாகவும் அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

காலை 7.15 மணி நிலவரப்படி ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து மூன்று எம்ஆர்டி நிலையங்கள் தூரத்தில் உள்ள புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்துக்குச் செல்ல கிராப், கம்ஃபர்ட்டெல்குரோ, கோஜெக் கார்கள் $24லிருந்து $31 வரை வசூலித்தன.

ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படும் இடத்துக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்ததால் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பயணிகள் சிலர் அதிருப்தி அடைந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கவனித்தனர்.

எம்ஆர்டி நிலையத்திலிருந்து பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல 10 நிமிடங்களுக்கு மேல் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாககத் தாம் விரக்தி அடைந்ததாவும் ஊட்ரம் பார்க்கை நோக்கிச் சென்ற திரு ராஜ் குமார் தெரிவித்தார்.

“எனக்கு முழங்கால் பிரச்சினை இருக்கிறது. வழியெல்லாம் நொண்டிக்கொண்டே நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, பேருந்து நிலையத்தை அடைய படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருந்தது. எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள இடத்தில் பேருந்துகளை ஏன் நிறுத்தவில்லை? சக்கரநாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் சிரமப்படுவர்,” பாதுகாவலராகப் பணி புரியும் 66 வயது திரு ராஜ் குமார் கூறினார்.

புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியே பேருந்துக்காகப் பலர் கிட்டத்தட்ட 100 மீட்டர் நீளமுள்ள நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் பேருந்துகளுக்கும் பயணிகளுக்கும் வழிகாட்டிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்