கிழக்கு-மேற்கு பாதையில் ரயில் சேவைகள் நவம்பர் 29 முதல் டிசம்பர் 8 வரை 10 நாள்களுக்கு பிடோக், தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையே இயங்காது. இந்த காலகட்டத்தில் தானா மேரா, எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையே எந்த சேவையும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அதற்குப் பதிலாக இணைப்புப் பேருந்துகளில் செல்ல வேண்டியிருக்கும். மேலும் அவர்களின் பயணங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். இது 30 நிமிடங்கள் வரை ஆகலாம். இருப்பினும், அவர்களின் பயணச் செலவு அப்படியே இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த 10 நாள்களின் சேவை மாற்றங்களால் 180,000 பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கிழக்கு-மேற்கு பாதையிலிருந்து புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனைக்குத் தடங்களை இணைக்கும் பணிகள் நடைபெற ஏதுவாக இந்த இரண்டாம் சுற்று சேவை மாற்றங்கள் இடம்பெறும் என்று அக்டோபர் 3ஆம் தேதி ஓர் அறிக்கையில் ஆணையம் விவரித்தது.
இந்தப் பணிகள் தண்டவாளங்களை தானா மேரா நிலையத்தில் உள்ள புதிய தளமேடையுடன் இணைக்கும்.
பயணிகள், தெம்பனிஸ், பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையே ஐந்து நிமிட இடைவெளியிலும், எக்ஸ்போ, சாங்கி விமான நிலையங்களுக்கு இடையேயும், பாய லேபார், பிடோக் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஐந்து நிமிட இடைவெளியில் இயங்கும் இணைப்பு ரயில்களிலும் பயணம் செய்யலாம்.
2024ஆம் ஆண்டு, டிசம்பர் 7 முதல் 9 வரை தானா மேரா, தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையே மூன்று நாள்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சுற்று மூடல்கள் வருகின்றன. இந்தப் பணிகள் ஆரம்பத்தில் 2024ஆம் ஆண்டு, டிசம்பர் 10 வரை நான்கு நாள்கள் நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் தண்டவாளப் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன.
சிங்கப்பூரின் மிகப்பெரிய பேருந்து மற்றும் ரயில் பணிமனையான புதிய பணிமனை, அந்த ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படுவதற்கு முன்பு, அடுத்த சுற்று சேவை மாற்றங்கள் 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள கூடுதலாக 30 நிமிடங்கள் எடுக்கக்கூடும் என்று கூறிய ஆணையம், பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், டௌன்டவுன் லைன் போன்ற மாற்று எம்ஆர்டி வழிகளைக் கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்தியது.