அறப்பணி ஆற்றிய சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினர்க்கு ‘முயிஸ்’ விருதுகள்

அறப்பணி ஆற்றிய சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினர்க்கு ‘முயிஸ்’ விருதுகள்

படம்: செய்யது இப்ராகிம்

06 Nov 2026 - 7:01 pm

2 mins read

சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) இவ்வாண்டு சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கும் பரந்த சிங்கப்பூர் சமூகத்திற்கும் சிறப்பான முறையில் அறப்பணி ஆற்றிய 10 பேருக்கு விருதுகள் வழங்கி அங்கீகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) இஸ்தானாவில் நடந்த விருதளிப்பு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருது வழங்கிக் கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருது வழங்கிக் கௌரவித்தார். - படம்: செய்யது இப்ராகிம்

அவருடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மதும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது விருது பெற்றவர்களுக்குத் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது விருது பெற்றவர்களுக்குத் தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். - படம்: செய்யது இப்ராகிம்

அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தொடர்ந்து சமூகச் சேவையில் ஈடுபட்டு வரும் விருதாளர்களுக்கு அவர் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

“ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் சாதனைகளில் இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மையில்தான் உள்ளது. நமது வெற்றி நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வெற்றியடைய செய்யும்போதே அதற்கு உண்மையான அர்த்தம் உண்டாகிறது,” என்றார் அவர்.

இவ்வாண்டு சிறந்த சேவைக்கான விருது ஒருவருக்கும் அறுவருக்குச் சேவை விருதும் மூவருக்கு இளம் சேவையாளர் விருதும் வழங்கப்பட்டன.

சேவை விருதை வென்ற அறுவரில் ஒருவரான ஹஸன் மசூத் அவ்விருது தனக்கானது மட்டுமன்று எனக் கூறினார்.

“இவ்விருதை நான் என் தனிப்பட்ட சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாக மட்டும் கருதவில்லை. இது என்னுடன் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து சேவையாற்றிவரும் நண்பர்கள், சேவையாளர்கள் அனைவருக்கும் உரியது,” என்றார் அவர்.

ஜாமியா சூலியா பள்ளிவாசல், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலச் சங்கம், ரோட்டரி கிளப் எனப் பல்வேறு அமைப்புகள்வழி இந்திய முஸ்லிம் மாணவர்களின் கல்வி, முழுமையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவர் தொடர்ந்து உதவிவருகிறார்.

இளையர்களும் சமூகச் சேவைப் பணிகளில் ஈடுபடுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், சமூகத்திற்குப் பங்களிக்க அவர்கள் முன்வர வேண்டுமென ஊக்குவித்தார்.

சேவை விருதைப் பெற்ற மற்றொருவரான டாக்டர் முஸ்ஃதபா இஸ்ஸுதீன், இந்த அங்கீகாரம் சேவையில் தாம் காட்டிய ஈடுபாட்டுக்கான பலனாக அமைந்துள்ளதெனக் கருதுகிறார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து விருது பெற்ற டாக்டர் முஸ்தஃபா இஸ்ஸுதீன் (வெள்ளைச் சட்டையில்). அவர்களுடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது (இடக்கோடி), ‘முயிஸ்’ தலைவர் முகம்மது சாட் அப்துல் ரஹ்மான் (வலக்கோடி).
அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து விருது பெற்ற டாக்டர் முஸ்தஃபா இஸ்ஸுதீன் (வெள்ளைச் சட்டையில்). அவர்களுடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி முகம்மது (இடக்கோடி), ‘முயிஸ்’ தலைவர் முகம்மது சாட் அப்துல் ரஹ்மான் (வலக்கோடி). - படம்: செய்யது இப்ராகிம்

“சேவை செய்யும் வேளையில் பணிவு, நேர்மை, நம்பிக்கை ஆகிய விழுமியங்கள் மிகவும் முக்கியமானவை. அவ்விழுமியங்களை இளையர்கள் கடைப்பிடிப்பதும் அவசியமென எண்ணுகிறேன்.

“பல கலாசாரங்களைக் கொண்ட சிங்கப்பூரில் நமது நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதுடன் பிற கலாசாரங்களையும் மதித்து, புரிந்து செயல்படுவதும் மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

அடுத்த தலைமுறைச் சமூகத் தலைவர்களுக்கு வழிகாட்டுவதில் அவர் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

அடுத்த தலைமுறையினரிடையே சமூகச் சேவை உணர்வைப் புகட்ட விரும்புகிறார் டாக்டர் முஸ்தஃபா இஸ்ஸுதின்.
அடுத்த தலைமுறையினரிடையே சமூகச் சேவை உணர்வைப் புகட்ட விரும்புகிறார் டாக்டர் முஸ்தஃபா இஸ்ஸுதின். - படம்: செய்யது இப்ராகிம்

சமூக அமைப்புகளை வலுப்படுத்தி, உதவி தேவைப்படும் மக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கி, அனைவரையும் ஒன்றிணைப்போருக்கு 1991ஆம் ஆண்டு முதல் ‘முயிஸ்’ விருது வழங்கிச் சிறப்பித்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்முஸ்லிம்சமூக சேவைவிருது