அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணங்களுக்கென தனிப்பட்ட முறையில் பல சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வெளியிட்டது.
குறுகிய காலப் பயணங்கள் உட்பட புனிதப் பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என வியாழக்கிழமை (நவம்பர் 5) முயிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா புனிதப் பயணங்களுக்கான அமைச்சு, 2027ஆம் ஆண்டுக்கென 900 இடங்களை சிங்கப்பூருக்கு வழங்கியுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு அதற்கான கடிதங்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் அனுப்பிவைக்கப்படும். அது குறித்து அவர்களுக்கு குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் அனுப்பப்படும் எனவும் முயிஸ் அறிவித்தது.
சவூதி அரேபியாவுக்கு செல்ல விரும்புவோருக்கென ஏறத்தாழ 50 விழுக்காட்டுக்கும் அதிக பயணத் தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அவற்றின் தொடக்க கட்டணம் $13,864 முதல் $21,199 வரை மொத்த பயண நாள்களையும் தங்கும் வசதிகளையும் பொறுத்து அமையும் என்று முயிஸ் குறிப்பிட்டது.
அரசாங்கத்தின்கீழ் செயல்படும் அமைப்பான முயிஸ், அத்திட்டத்திக்காக 10 அதிகாரபூர்வ பயண முகவர்களை பணியமர்த்தியுள்ளது. அவை 37 அனுமதி வழங்கப்பட்ட ஹஜ் பயணத் தொகுப்புத் திட்டங்களை 2027 புனிதப் பயணத்துக்கு வடிவமைத்துள்ளன. அந்த எண்ணிக்கை 2026ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டதைவிட 25 பயணங்கள் அதிகமாகும்.
விரிவாக்கப்பட்ட தொகுப்புகளில் வேலை, குடும்பம் அல்லது இதர தனிப்பட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கென 18 நாள்களில் திரும்பக் கூடிய குறுகிய கால பயணத் தொகுப்புகளும் அடங்கும். பயணத் தொகுப்புகளில் 23, 25, 28 நாள்களில் சென்று திரும்பும் பயணத் தொகுப்புகளும் உள்ளன.
பலதரப்பட்ட தனிப்பட்ட விவகாரங்களை ஒரே நேரத்தில் சமாளிப்போருக்கென சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் நீக்குப்போக்கான ஏற்பாடு குறுகிய காலத் தொகுப்பில் செய்யப்பட்டுள்ளது. அதன்வழியாக சமூகத்தில் அதிகமானோர் ஹஜ் புனிதப்பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று முயிஸ் விளக்கமளித்தது.
இணையத்தில் MyHajSG என்ற தளத்தில் பயணத்துக்கான ஒப்புதல் கடிதத்தை பதிவிறக்கம் செய்து, அனுமதி வழங்கப்பட்ட பயண முகவர்களிடம் தொகுப்புத் திட்டமொன்றை வாங்கி, அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்வு செய்யப்பட்டோர் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும்.
